உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்ய முடிவு

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்ய முடிவு

புதுடில்லி:இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் டில்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர். இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியதற்கு பின், அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரி ஒருவர், முதல்முறையாக பேச்சு நடத்த வந்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழு, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வாலை சந்தித்து நேற்று பேச்சு நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், வர்த்தக ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ''பரஸ்பரம் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை, விரைவில் இறுதி செய்ய தேவையான முயற்சிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, “அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி லிஞ்ச் மற்றும் இந்திய அதிகாரிகள் இடையேயான சந்திப்பை, 6வது கட்ட பேச்சு என பார்க்கக்கூடாது. ஆனால், அதற்கு ஒரு முன்னோடி என கருதலாம். இந்தியாவும், அமெரிக்காவும், வாராந்திர அடிப்படையில், இரு நாடுகளின் வர்த்தகம் தொடர்பாக காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன,” என வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !