முதல் புல்லட் ரயில் திட்டத்தில் எல் அண்டு டி 2வது ஆர்டர்
புதுடில்லி : மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில் 2,500 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றிருப்பதாக எல் அண்டு டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் கூறியதாவது: தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்த ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் 50 சதவீத பணிகளுக்கு பொறுப்பேற்கிறோம். கடந்த 2022 ஏப்ரலில், இதே திட்டத்தின் டி3 என்ற 116 கி.மீ., துாரத்துக்கு பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை எல் அண்டு டி பெற்றது. வதோதராவில்் இருந்து சபர்மதி பணிமனை வரையான இந்த பாதையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. எனவே புல்லட் ரயில் திட்டத்தில், எல் அண்டு டி பெறும் இரண்டாவது ஆர்டர் இது. இந்த ஆர்டரின் படி 156 கி.மீ., துார அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும். இதற்காக ஜப்பான் நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.