வெள்ளியை மறுசுழற்சி செய்ய எம்.எம்.டி.சி., - பாம்ப் திட்டம்
புதுடில்லி: வெள்ளியை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளதாக 'எம்.எம்.டி.சி., - பாம்ப்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எம்.எம்.டி.சி., நிறுவனமும், சுவிட்சர்லாந்தின் எம்.கே.எஸ்., பாம்ப் நிறுவனமும் இணைந்து, கடந்த 2008ல் எம்.எம்.டி.சி., - பாம்ப் எனும் தங்கம், வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனத்தை துவங்கின. இதன் தலைமை செயல் அதிகாரி சமித் குஹா தெரிவித்ததாவது: வெள்ளிக்கான தேவை வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய போக்கு தொடர்ந்தால், அதற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்ய புதிதாக உற்பத்தி செய்யப்படும் வெள்ளியைவிட மறுசுழற்சி செய்யப்பட்ட வெள்ளி பெரிய பங்கு வகிக்கும். எனவே, இந்த துறையில் தடம் பதிக்க முடிவு செய்துள்ளோம். எம்.எம்.டி.சி., - பாம்ப் தற்போது 20 கடைகளில் தங்கம் மறுசுழற்சி செய்து வருகிறது. இவற்றை வெள்ளிக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் சில கடைகளில் இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் துவங்கி, பின் முழுமையாக விரிவுபடுத்துவோம்.