வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி காத்திருக்கும் கடலை மிட்டாய்
சென்னை: வளைகுடா நாடுகளுக்கு கடலை மிட்டாய் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், நிலைமை எப்போது சீராகும் என காத்திருப்பதாக, கடலை மிட்டாய் தயாரிப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் சங்க செயலர் கண்ணன் கூறியதாவது: கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமானத்திலும், கப்பலிலும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதத்துக்கு 20 டன் கடலை மிட்டாய், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மேற்காசிய போரால், கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது பதற்றம் குறைந்திருந்தாலும், சூழல் முழுதுமாக மாறவில்லை. விமான பயணிகள் 10 கிலோ, 20 கிலோ அளவுகளில்தான் வாங்கி செல்கின்றனர். கப்பல் வாயிலாக மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு 60 டன் கடலை மிட்டாய் அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது, மொத்த கடலை மிட்டாய் ஏற்றுமதியில் 10 சதவீதம் தான் என்றாலும், வளைகுடா நாடுகள் முக்கிய சந்தை என்பதால், இந்த நிலை தொடராமல், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். மதுரை, பாரத் ஸ்னாக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கணேசன் நல்லமுத்து கூறுகையில், ''வழக்கமாக நம் நாட்டில் கோடை காலங்களில் கடலை மிட்டாய் வர்த்தகம் மந்தமாக இருக்கும். இதை ஈடுசெய்ய வளைகுடா நாடுகள் கைகொடுக்கும். தற்போது, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளின் சந்தை எப்போது சீராகும் என காத்திருக்கிறோம்,'' என்றார்.