உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  திருத்தப்பட்ட ஒப்பந்த அறிக்கை வெளியிட்டது அமெரிக்கா வேளாண் பொருள்கள், சேவை வரிகள் நீக்கம்

 திருத்தப்பட்ட ஒப்பந்த அறிக்கை வெளியிட்டது அமெரிக்கா வேளாண் பொருள்கள், சேவை வரிகள் நீக்கம்

வாஷிங்டன்:இந்தியாவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்த செயல் திட்டத்தில் இடம்பெற்ற அம்சங்களுக்கு முரணாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டிருந்த அறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல், புதிய அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுக்கு பின், இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்த செயல்திட்டம் அண்மையில் ஏற்பட்டது. அதில், இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா, 18 சதவீதமாக குறைப்பது, அதற்கு பதிலாக, அமெரிக்காவின் அனைத்து தொழிலக பொருட்கள் மற்றும் சில உணவு, வேளாண் பொருட்களுக்கு முழுமையாகவோ, பகுதியாகவோ இந்தியா வரி நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், 'வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம்' என்ற தலைப்பில், இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், ஒப்பந்த செயல் திட்டத்துக்கு மாறாக, சில வகை அமெரிக்க பருப்பு வகைகளுக்கும் இந்தியா வரியை தளர்த்தும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், 'தனது டிஜிட்டல் சேவை வரிகளை இந்தியா நீக்கும்' என்றும் கிட்டத்தட்ட 45 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது; இந்த கொள்முதல் இலக்கில் வேளாண் பொருட்களும் அடங்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது, இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெள்ளை மாளிகை, நேற்று மீண்டும் அறிக்கை வெளியிட்டது. அதில்,'சில வகை பருப்பு வகைகள்' என்ற வார்த்தை இடம் பெறவில்லை. டிஜிட்டல் சேவை வரி நீக்கப்படும் என்பதற்கு பதிலாக, டிஜிட்டல் வர்த்தக கொள்கை குறித்த பேச்சுக்கு இந்தியா சம்மதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது . 45 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா 'உறுதியளித்துள்ளது' என்பதை மாற்றி, 'திட்டமிட்டுள்ளது' என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்திய கொள்முதல் இலக்கு பட்டியலில் இருந்து வேளாண் பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பழைய அறிக்கை புதிய அறிக்கை இந்தியா வரி குறைக்கும் பொருட்களில் 'சில பருப்பு வகைகள்' சேர்ப்பு 'சில பருப்பு வகைகள்' என்ற வார்த்தை நீக்கம். 'டிஜிட்டல் சேவை வரிகளை இந்தியா நீக்கும்' 'டிஜிட்டல் வர்த்தக பேச்சுக்கு இந்தியா ஒப்புதல்' 'ரூ.45 லட்சம் கோடிக்கு இந்தியா இறக்குமதி செய்யும்' 'ரூ.45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்' கொள்முதல் பட்டியலில் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து வேளாண் பொருட்கள் நீக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.V.Srinivasan
பிப் 12, 2026 10:04

எந்த காரணத்தை கொண்டும் ஐரோப்பியன் யூனியனோடு செய்துள்ள வர்த்தக ஒப்பந்தத்தையும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியையும் மாற்றக்கூடாது. ஏன் என்றால் டிரம்ப் ஐயாவை நம்ப முடியாது. இன்னைக்கு ஒன்னு சொல்லுவார், நாளைக்கு அப்படியே பல்டி அடிப்பார். மோடிஜி உஷார்.


vbs manian
பிப் 12, 2026 08:53

இந்த ஒப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவித்து பிரச்சாரம் செய்கின்றனர். மத்திய அரசு ஒப்பந்தத்தால் விளையும் நன்மைகள் குறித்து நாளிதழ் டிவி ஊடகங்களில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.


GUNASEKARAN RANGASAMY
பிப் 13, 2026 20:21

நியாயப்படி ஒப்பந்தத்தின் பிரதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் ஷரத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களால் வந்தவர்கள் மக்களுக்குத் தானே விவரிக்க வேண்டும் ஏனெனில் எல்லாம் மக்களுக்காகத் தானே.


லட்சாதிபதி
பிப் 12, 2026 07:54

பாஞ்சிலட்சம் போடற மாதிரி கருப்பு பணம் கொண்டுவரப்படும் ரேஞ்சுல இருக்கே...


vivek
பிப் 12, 2026 08:39

எல்லாமே ஓசியில் வேணுமா


GUNASEKARAN RANGASAMY
பிப் 13, 2026 20:26

நாம் செலுத்தும் வரிகளுக்கு ஏற்ப நமக்கான உரிமைகளை உருவாக்கிக் கொடுத்தால் அதுவே போதும். பாக்கெட்டில் 15 லட்சம், 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி, எண்ணைய், வெண்ணை, லொட்டு லொசுக்கு ஒன்றும் தேவையில்லை.


ஜெ.குருநாதன் மதுரை
பிப் 12, 2026 06:47

ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்கலாமா வாங்க கூடாதா அது பற்றி ஒப்பந்தத்தில் என்ன போடப்பட்டுள்ளது?


GUNASEKARAN RANGASAMY
பிப் 13, 2026 20:27

யாரைப் பார்த்து என்ன கேள்வி? ஹாஹாஹா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை