சூரிய மின்சார உற்பத்தி திறன் தேவையை விட அதிகரிப்பு
புதுடில்லி:தேவையை விட அதிகமாக நாட்டின் சோலார் உற்பத்தி இருப்பதால், சோலார் தொழில்துறை புதிய வெளிநாட்டு சந்தைகளை கண்டறிய வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: கொரோனா தடைகள், சீனாவுடனான உறவு பாதிப்பு ஆகியவற்றை மீறி நாட்டின் சோலார் உற்பத்தி 2020ல் இருந்து 13 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு சோலார் உற்பத்தி துறைக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
Galleryஅமெரிக்காவின் வரி விதிப்புக்கு முன் நாட்டின் சூரிய மின் தொகுதியின் உற்பத்தி திறன், கடந்த 2023 மார்ச்சில் 70 சதவீதமாக இருந்தது. இது 40 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2020 வரை 80 சதவீத சூரிய மின்உற்பத்தி கருவிகளை இந்தியா இறக்குமதிதான் செய்தது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு வினியோக தொடரில் ஏற்பட்ட பாதிப்பால் உள்ளூரில் உற்பத்தியை பெருக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன் விளைவாக உள்நாட்டு சோலார் உற்பத்தி திறன் வேகமாக விரிவடைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோலார் உற்பத்தி திறன் 100 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள உற்பத்தியைவிட இது நான்கு மடங்காகும். உற்பத்தி உயர்வுக்கு ஈடாக, நாட்டின் சூரிய மின்சார தேவை உயரவில்லை. அதனால், வினியோக கட்டமைப்பு தடங்கல்கள் ஏற்பட்டன. அமெரிக்க வரி விதிப்பால் சோலார் மின்உற்பத்தி கருவிகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று வெளிநாட்டு சந்தைகளை கண்டறிய தேவை எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.