வரிசலுகை கோரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
புதுடில்லி: டீப் டெக், செமிகண்டக்டர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் துணிகர மூலதன நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெங்களூருவில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினர். அப்போது, வரிச் சலுகைகள் கோரியும், ஒழுங்குமுறைகள் குறித்து தெளிவு ஏற்படுத்தவும் வலியுறுத்தினர். கூட்டத்தில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு சிரமமின்றி அன்னிய முதலீடுகளை பெற ஏதுவாக, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் தொடர்பான விதிகள் குறித்து தெளிவு ஏற்படுத்த வேண்டும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகை வழங்க வேண்டும் டீப் டெக் நிறுவனங்களுக்கு 'ஸ்டார்ட் - அப் இந்தியா' திட்டத்தின் பலன்களை 10 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் ஆரம்ப கட்ட டீப் டெக் ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொடர்பான பலன்களை பெற, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் பதிவு விதிமுறைகளில் சீர்திருத்தங்கள் தேவை இந்த கோரிக்கைகள் குறித்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க, ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. டீப் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்பவை, முக்கியமான அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சிக்கலான சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் ஆகும்.