ரூ.3,000 கட்டண பாஸ் திட்டத்தால் சுங்கச்சாவடி வருவாய் 8% குறையும்
புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகளில் பயணிக்கும் தனியார் வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 3,000 ரூபாயில் சுங்கச்சாவடி கட்டண திட்டம் அறிமுகமாகி உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், ஓராண்டில் 200 சுங்கச்சாவடிகளை இலவசமாக கடக்க முடியும். இதனால், சுங்கச்சாவடிகளின் வருவாய் குறையும் என, 'கிரிசில்' ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றில் ஒரு தனியார் வாகனம், ஆண்டு கட்டண திட்டத்தில் பயணித்தால், சராசரியாக 4 முதல் 8 சதவீதம் வரை வருவாய் குறையும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.வருவாய் குறைந்தால், சுங்கச்சாவடிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய நெடுஞ்சாலைத் துறை முன்வந்துள்ளது. இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள், ஆவணங்கள், ஒப்புதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த குறைந்தபட்சம் ஆறு மாதம் வரை ஆகும் என கூறப்படுகிறது.இந்த தாமதத்தால், சுங்கச்சாவடி செயற்பாட்டாளர்களுக்கு நிதி நெருக்கடி எதுவும் இருக்காது என்றும், முதல் இரண்டு காலாண்டு வரை இந்த இழப்பை, அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.* தற்போது ஒரு முறை கடக்க சராசரியாக 70 - 80 ரூபாய் கட்டணம் வசூல்* புதிய திட்டத்தால் கட்டணம் 15 ரூபாயாக அதாவது 80% வரை குறையும்* பயணிக்கும் மொத்த வாகனங்களில், தனியார் வாகனங்களின் பங்கு 35 - 40% * இவற்றின் வருவாய் மொத்த வருவாயில் 25 - 30%.