வர்த்தக துளிகள்
எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் சர்வம் ஏ.ஐ., ஒப்பந்தம்
'எ ஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக சேவை வழங்க, 'சர்வம் ஏ.ஐ.,' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, சர்வம் ஏ.ஐ., நிறுவனத்தின், 'சம்வாத்' மற்றும் 'ஆர்யா' ஆகிய ஏ.ஐ., தளங்கள், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படும். இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் சம்வாத் தளத்தில் உரையாடி, தங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம். ஆர்யா தளம், பல்வேறு ஏ.ஐ., அமைப்புகளை ஒருங்கிணைத்து ணிகளை திறம்பட மேற்கொள்ள உதவும். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, எஸ்.பி.ஐ., லைப் நிறுவனத்தின் 8 கோடி வாடிக்கையாளர்களும், 3.50 லட்சம் முகவர்களும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிறுவன டிரோன் பாகங்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டம்
சி ங்கப்பூரை சேர்ந்த, 'தக்ரால் கார்ப்பரேஷன்' நிறுவனம், வரும் மே மாதம் முதல் இந்தியாவில் டிரோன் பாகங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையில், 'தொழில் துறைக்கு தேவையான தனித்துவமான டிரோன்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசித்துவருகிறோம். எமது துணை நிறுவனமான, 'பாரத் ஸ்கைடெக்' வாயிலாக விவசாயத்துக்கான டிரோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும். 'இந்திய டிரோன் சந்தையின் மதிப்பு, 2024ல் 4,550 கோடி ரூபாய் ஆகும். இது, 2030ல் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்' என்று கூறியுள்ளது. சீனாவின் டி.ஜே.ஐ., தொழில்நுட்ப குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தக்ரால், இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் 20 முதல் 30 டி.ஜே.ஐ., சில்லரை விற்பனை கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளது.