மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை வேண்டும்
சென்னை:'மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து துரை வைகோ எம்.பி.,யின் அறிக்கை: நெல்லை, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடக்கிறது. இப்போது, சந்தையில் மக்காச்சோள விலை பெரும் வீழ்ச்சி கண்டதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர் மக்காச்சோள உற்பத்தி செலவு ஒரு குவின்டாலுக்கு 2,200 ரூபாய் ஆகிறது. ஆனால், 1,800 ரூபாய் வரைதான் விலை கிடைக்கிறது. இந்த இழப்பை ஈடு செய்ய தமிழக அரசு ஒரு குவின்டாலுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மக்காச்சோள விவசாயத்தையும் தக்க வைக்கும். அண்டை மாநிலமான கர்நாடகாவில், குவின்டாலுக்கு 2,150 ரூபாய் வரை விலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை 1,900 ரூபாய்க்கு கீழே சென்றால், அதிகபட்சம் 50 குவின்டால் வரை, 250 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப் படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநில அரசுகளும் பல்வேறு வழிகளில் மக்காச்சோள விவசாயத்தை ஊக்குவித்து, விவசாயிகள் நலனை பாதுகாக்கின்றன. அதுபோல், தமிழகத்திலும் குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 'கொள்முதல் நிலையம் தேவை' தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மானாவாரி விவசாய நிலங்களில், உரிய விலையின்றி போன மக்காச்சோளத்துக்கு அரசே கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகள் மக்காச்சோளம் குவின்டால் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்ககோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மோட்டார் பாசனம் எனில், ஏக்கருக்கு 40,000 ரூபாய், மானாவாரி விவசாயம் எனில், ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க கோருகின்றனர். அரசே கொள்முதல் செய்யும் வகையில் மக்காச் சோள கொள்முதல் நிலையங்களை, அறுவடை காலங்களில் ஏற்படுத்த அவர்கள் வலியுறுத்துகின்றனர்.