இன்சூரன்ஸ்: யூலிப் பாலிசி அதிக லாபம் தரும் ஒன்றா?
போனஸ் என்றாலே ஒரு மகிழ்ச்சி. ஒரு பொருள் வாங்க மற்றொரு பொருளை அத்துடன் கொடுப்பது, ஒரு வியாபார உத்தியாக அமைந்துவிட்டது. ஆயுள் காப்பீட்டு இன்சூரன்ஸிலும் அப்படி உண்டு. காப்பீடு மற்றும் முதலீடு இரண்டையும் சேர்த்து கொடுக்கும் சில பாலிசிகள் உண்டு. இதில் ஒருவகை 'யூனிட் லிங்க்டு பாலிசி' அல்லது 'யூலிப்'. இவற்றில் என்ன வேறுபாடு? ஆயுள் காப்பீடு எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். எந்த ஒரு ஆயுள் காப்பீட்டுக்கும் பிரீமியம் துல்லியமாக மதிப்பிடப்படும். பாலிசிதாரரின் ஆயுள் முடிந்தவுடன், நாமினிக்கு கிளெய்ம் வழங்கப்படும். ஆயுள் காப்பீடு வாங்கி இருக்கக்கூடிய பல லட்சம் பாலிசிதாரர்கள் கட்டி வரும் பிரீமியம் தொகைகளை ஒட்டுமொத்தமாக இன்சூரன்ஸ் கம்பெனி முதலீடு செய்து, அந்த வருமானத்திலிருந்து கிளெய்ம்களை தேவைப்பட்ட தருணத்தில் கொடுத்து வரும். இதை சரியான முறையில் கையாள, நுணுக்கமான முதலீட்டு கணக்கு செய்ய வேண்டும். பலவிதமான முதலீடு வகைகளில் நீண்டகால ரீதியாக எது எவ்வளவு ரிட்டர்ன் கொடுக்கும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இதில் மற்றொரு நுணுக்கம் உண்டு. ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பதால், ஒவ்வொரு பாலிசிதாரரும் கிளெய்ம் செய்யத் தான் போகின்றனர். எப்போது எந்த கிளெய்ம் வரும் என்பது இதில் தெரியாத விஷயம். தெரியாத விஷயத்தை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அதற்கேற்றார் போல் முதலீடு செய்வது? எது வழி? என்று மகாபாரதத்தில் யக் ஷன் கேட்க தருமன் பதில் சொல்கிறான்: “இது பற்றி பல தர்க்கங்கள் உள்ளன, அறிஞர்கள், ரிஷிகள் பல பாதைகளை சுட்டிக் காட்டுகின்றனர். இதில் அவர்களுக்குள்ளும் ஒத்த நோக்கு இல்லை. ஆகையால், நம் முன்னோர்கள் சென்ற பாதையே சரியான பாதை” என்று கூறுகிறான். ஒரு சாதாரண விஷயத்துக்கு இதை பொருத்திப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட ஜனத்தொகையில் முற்காலத்தில் ஏற்பட்ட மரணங்களின் வரலாற்றுத் தரவை ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதை இப்போது உள்ள ஜனத்தொகைக்கு ஏற்றவாறு கணக்கிட்டு, ஒரு லட்சம் பாலிசிதாரர்களில் எவ்வளவு பேர் எப்போது இறக்கக்கூடும் என்ற ஒரு புள்ளிவிபர மதிப்பீடு எடுப்பர், 'ஆக்சுவரி' என அழைக்கப்படும் புள்ளி விபர துறையில் தேர்ந்த நிபுணர்கள். ஜனத்தொகை புள்ளி விபர ஆதாரத்தில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் கணக்கிடப்படும். ஆயுள் காப்பீடு மற்றும் முதலீட்டு ரிட்டர்ன் இரண்டும் சேர்ந்து வழங்கும் பாலிசிகள், இந்த பிரீமியத்துக்கு மேலே அதிகப்படியான ஒரு தொகையை பிரீமியத்துடன் சேர்த்து வசூலிக்கும்; அதைத் தான் முதலீடு செய்யும். இந்த இரண்டு பிரீமிய வகைகளை பிரித்துப் பார்க்க நம்மால் முடியாது. காப்பீடு மற்றும் முதலீடு காம்போ பாலிசிகளில் சில வகைகள் உண்டு. அதில் 'யூனிட் லிங்க்டு பாலிசி' என்பது ஒரு வகை. இந்த பாலிசியில் ஆயுள் காப்பீடு தவிர, ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும் உங்கள் பிரீமியத்தின் வாயிலாக வரும் ரிட்டர்னையும் திருப்பி கொடுக்கும். சாதாரண ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு நீங்கள் கொடுக்கும் பிரீமியம், மிக பாதுகாப்பான அரசு சார்ந்த சில துறைகளில் / வகைகளில் மட்டும் முதலீடு செய்யப்படும். இதற்கான வரையறைகளை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அதாவது இன்சூரன்ஸ் ஆணையம், விரிவாக கொடுத்திருக்கிறது. யூலிப் என்பது ஒரு மாறுபட்ட ஆயுள் பாலிசி. இதில் ஆயுள் காப்பீட்டு தொகை தவிர ஒரு லாபமும் ரிட்டர்ன் ஆக கொடுப்பார்கள். இது ஷேர் மார்க்கெட்டில் உங்கள் பிரீமியத்தை போட்டு ஈட்ட கூடிய லாபமாகும். இதனால் யூலிப்பில் வரும் பாலிசி தொகை, வழக்கமான காப்பீட்டு பாலிசிகளை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும். ஆயுள் காப்பீடு என்ற தொகை கேரண்டி என்றாலும், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதால், அந்த ரிட்டர்ன், ஷேர் மார்க்கெட் நிலைமையையும், நமது கிளைம் ஏற்படும் காலத்தையும் பொறுத்தது. அதனால் லாபமாகவும் இருக்க முடியும், நஷ்டமாகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிவாக யூலிப் பாலிசி என்பது லாபகரமானதா, இது நமக்கு உகந்ததா, இதன் ரிட்டர்ன்ஸ் நிழலா? நிஜமா? இது, ஆயுள் காப்பீடு பிளஸ் ஷேர் மார்க்கெட் முதலீடு. அதனால் இரண்டு பாகங்களும் வேறு வேறு விதமாக பணம் கொடுக்கும் என்று இந்த அடிப்படையில் செயல்பட்டால் நிஜம் தான். இந்த புரிதல் இல்லாமல், அதிக லாபம் கொடுக்கக்கூடிய முதலீடு என்று நினைத்து வாங்கினால், யூலிப் நிழலாகத் தான் இருக்க முடியும்.
வேடிக்கையான ஒரு உண்மை
'ஆக்சுவரி' என்ற புரொபஷனல்கள் உலகிலேயே மிக அதிக அளவு சம்பாதிக்கக்கூடிய டாப் நிபுணர்கள். நீங்களோ உங்கள் வீட்டில் யாராவது கணக்கு மற்றும் ஸ்டேட்டிஸ்டிக்சில் ஆர்வம் காட்டினால், 'ஆக்சுவரி' படிப்பு படிக்க துாண்டுங்கள். இது 'சார்டர்ட் அக்கவுன்டன்ட்' மாதிரி தனிப்பட்ட முறையில் படித்து பரீட்சைகள் எழுதும் ஒரு சிஸ்டம். 'சி.ஏ.,' மாதிரியே பிராக்டீஸ் பண்ணவும் முடியும். கம்பெனிகளில் பணிக்கு சேரவும் முடியும். போனஸ் பன் பேக்ட்: ஆக்சுவரிகளுக்குள் இந்திய ஆக்சுவரிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களுடைய நிபுணத்துவம் உலகறிந்தது!