இனசுரன்ஸ் : தொந்தரவு அழைப்புகளை தடுக்க என்ன செய்யலாம்?
நான் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கடந்தாண்டு மருத்துவ காப்பீடு எடுத்தேன். அவர்களுடைய சேவையில் எனக்கு அதிருப்தி ஏற்பட்டதால், இந்தாண்டு வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு எனது காப்பீடை மாற்றிவிட்டேன்.அதன் பிறகும் முந்தைய நிறுவனத்தில் இருந்து தினமும் பலமுறை போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். போனை எடுக்காவிட்டால், விடாமல் 8, 10 முறை கூட அழைப்பு விடுக்கிறார்கள். இனி தொந்தரவு செய்யமாட்டோம் என, போனில் பல முறை உறுதி அளித்தார்கள். ஆதாரத்துடன் இ--மெயில் அனுப்பிய பிறகு, 'இனி எந்த விதத்திலும் அழைக்க மாட்டோம்' என இ-மெயிலிலும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்கள். ஆனால், எல்லா வாக்குறுதிகளையும் மீறி, மீண்டும் மீண்டும் போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டுவது? - ஹரிஹரன், கோவை அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து, அடிக்கடி அழைக்கும் எண்களை தடை செய்து உங்கள் மன அமைதியை பாதுகாப்பது உங்கள் கையில் உள்ளது. 'டெலிமார்க்கெட்டிங்' அழைப்புகளை ஒரு முறை எடுத்தால், அவர்கள் மேலும் பல முறை அழைப்பார்கள். அவர்கள் தங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விடுவதும் ஒரு நடைமுறை அணுகுமுறை. இருப்பினும், காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தொடர்ந்து வரும் தொந்தரவு குறித்து நீங்கள் அனுபவிக்கும் சிரமத்துக்கு எனது அனுதாபங்கள். இப்படிப்பட்ட தொந்தரவுகளை பற்றி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு புகார் அளிக்கும் வசதியும் உள்ளது. அதற்கான நடைமுறைகள் அதன் இணையதளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. புகார் அளித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதற்காக நீங்கள் செலவிட விரும்பும் நேரம் மற்றும் முயற்சி முக்கியமானது. முதலில் எளிய முறைகளை பின்பற்றி பார்த்து, அதனால் பிரச்னை குறைந்தால், மற்ற நடவடிக்கைகளை தவிர்க்கலாம். எந்த சுகாதார காப்பீட்டு நிறுவனம், கிளைம் விஷயத்தில் நன்றாக செயல்படுகிறது? அதை அறிந்துகொள்வது எப்படி? - சங்கரன், திருவல்லிக்கேனி ஒரு குறிப்பிட்ட சுகாதார காப்பீட்டு நிறுவனம் எப்போதும் முன்னணியில் இருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் நிறுவனங்களின் செயல்திறன் காலத்தின்படி மாறிக்கொண்டே இருக்கும். இதற்கான நம்பகமான மற்றும் அப்டேடட் தகவல்களை பெறுவதற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மிக சிறந்த ஆதாரமாகும். அங்கு வெளியிடப்படும் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ போன்ற புள்ளிவிபரங்கள், ஒரு நிறுவனம் எவ்வளவு திறம்பட கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது என்பதை அறிய உதவும். சுகாதார காப்பீடு, பல்வேறு வகையான நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இதை வழங்குகின்றன.