க டந்த நிதியாண்டில், ஆசியாவிலுள்ள பல நாடுகளின் நாணயங்கள் சந்தித்த சரிவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. மார்ச் 30ம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவாக 95.21ஆக சரிந்து, பின்னர் 95க்கும் கீழ் முடிந்தது. கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9.88 சதவீதம் சரிந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது. முன்னதாக 2011 - 12ம் நிதியாண்டில், ரூபாய் மதிப்பு 12.4 சதவீதம் சரிந்ததே மிக மோசமான நிலையாக கருதப்பட்டது. அப்போதைய வீழ்ச்சி உள்நாட்டு காரணங்களால் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடி சூழலே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக சரிந்ததற்கான காரணங்களையும், அதை தடுக்க செய்ய வேண்டியவை பற்றியும் ரிசர்வ் வங்கியின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்ததாவது: நாணய மதிப்பு சரிவு என்பது அந்தந்த நாட்டின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணங்களை பொறுத்தும் அமையும். எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. அமெரிக்காவின் பணவீக்கம் 2.40 சதவீதம். இந்தியாவின் பணவீக்கம் 3.21 சதவீதமாக குறைவாக உள்ளது. அதேநேரம், இந்தியாவின் வட்டி விகிதம் (5.25%), அமெரிக்காவை(3.50%)விட அதிகம். இந்த அதிகப்படியான வட்டி, உற்பத்தி செலவை உயர்த்தி, இந்திய பொருட்களின் சர்வதேச ஏற்றுமதி போட்டி தன்மை பலவீனப் படுத்துகிறது. மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருப்பதால், டாலரின் தேவை அதிகரித்து, அதன் மதிப்பும் உயர்கிறது. இதுதவிர, மத்திய கிழக்கு நாடுகளின் போர், அமெரிக்க வரிவிதிப்பு, அன்னிய முதலீடுகள் இந்திய சந்தையிலிருந்து வெளியேறி டாலரில் முதலீடு செய்ததும் காரணமாக அமைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, தனது கையிருப்பில் உள்ள டாலரை சந்தையில் விற்பது ஒரு தற்காலிக தீர்வே ஆகும். ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிப்பதால் மட்டுமே அன்னிய செலாவணி கையிருப்பை நிலைப்படுத்த முடியும். சந்தையில் டாலரின் வரத்து அதிகரிக்கும் போது மட்டுமே ரூபாயின் மதிப்பு நிலையான சமநிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார். 2025 - 26ல் ஆசிய நாணயங்களின் நிலை: இந்திய ரூபாய் 9.88% சரிவு ஜப்பானிய யென் 6% சரிவு பிலிப்பைன்ஸ் பெசோ 5.74% சரிவு தென் கொரிய வொன் 2.88% சரிவு