பணியாளர்களுக்கு ஓய்வூதியம் சொமாட்டோ அறிமுகம்
'எச்.டி.எப்.சி., பென்ஷன்' உடன் இணைந்து, முதல்முறையாக, தன்னுடைய பணியாளர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை 'சொமாட்டோ' அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் உணவு வினியோக நிறுவனமான சொமாட்டோ, 'என்.பி.எஸ்.,பிளாட்பார்ம் பணியாளர்கள் மாடல்' என்ற பெயரில், தனது நிறுவனத்தில் பணிபுரிவோருக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் துவங்கி வைத்தார். நீண்ட கால நிதி பாதுகாப்பை, 'கிக்' பணியாளர்களுக்கு அளிப்பதை இலக்காக கொண்டு, இத்திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. பணியாளர்கள் கே.ஒய்.சி., விபரங்களைப் பூர்த்தி செய்து, இத்திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம். இதுவரை 30,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இத்திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணை துவங்கி உள்ளதாக, சொமாட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.