உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / போலி பங்கு வர்த்தக செயலிகளை கண்டறிவது எப்படி?

போலி பங்கு வர்த்தக செயலிகளை கண்டறிவது எப்படி?

பங்கு முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அப்பாவி முதலீட்டாளர்களை ஏமாற்றும் மோசடி பங்கு வர்த்தக செயலிகளும் அதிகரித்திருப்பது, நிதி உலகில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல்நுட்பம் காரணமாக, முதலீட்டாளர்கள் ஸ்மார்ட்போனில் இருந்தே செயலி வாயிலாக பங்குகளை வாங்கி விற்பது எளிதாகி உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு விஷமிகள் பலர், போலி பங்கு வர்த்தக செயலிகள் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தகைய மோசடி செயலிகளை கண்டறிவதற்கான வழிகளை அறிந்திருப்பது அவசியம்.

வல்லுனர்கள் எச்சரிக்கை:

போலி பங்கு வர்த்தக செயலிகள் தொடர்பாக, முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி சேவை நிறுவனமான ஜெரோதா நிறுவனர் நிதிஷ் காமத்தும் அண்மையில் இது குறித்து எச்சரித்துள்ளார்.

போலி செயலிகள்:

பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் உள்ளவர்களை ஈர்க்கும் வகையில் போலி செயலிகள் அமைந்துள்ளன. பங்கு வர்த்தக செயலிகள் போலவே இந்த செயலிகள் தோற்றம் தருகின்றன. மேலும், இந்த செயலிகள் எளிதாக லாபம் பார்க்கலாம் என்பது போன்ற உணர்வையும் உண்டாக்குகின்றன.

வாட்ஸாப் குழு:

பெரும்பாலும் இந்த செயலிகள் ஏதேனும் வாட்ஸாப் குழு வாயிலாக அறிமுகமாகின்றன. முதலீட்டாளர்கள் இந்த செயலி களை பயன்படுத்த துாண்டப்படுகின்றனர். துவக்கத்தில் சிறிதளவு லாபமும் கிடைக்கிறது. ஆனால், அடுத்த கட்டமாக பணத்தை விலக்கிக் கொள்ள முன்பணம் செலுத்த வேண்டும் என சொல்லி ஏமாற்றுகின்றனர்.

உடனடி பலன்:

போலி செயலிகளிடம் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம். உடனடி பணம், எளிய லாபம் போன்ற துாண்டில் வாசகங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த செயலிகள் நம்பகமானவை தானா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இரட்டிப்பு கவனம்:

போலி செயலிகள் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டே இருப்பதால், கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பங்கு சந்தையில் பணம் ஈட்டுவது தொடர்பான திட்டங்கள் எந்த அளவு நம்ப வைக்க முயல்கின்றனவோ, அதே அளவு எச்சரிக்கை முதலீட்டாளர்களுக்கு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ