ஆயில் இந்தியா பங்குகள் நடப்பாண்டில் 200% உயர்வு
மும்பை:நடப்பாண்டில் மட்டும் 'ஆயில் இந்தியா'வின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில், 200 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா, இயற்கை எரிவாயு, எண்ணெய் துரப்பணம் மற்றும் உற்பத்தி, எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பசுமை ஹைட்ரஜன், அழுத்தப்பட்ட பயோ-கேஸ், சோலார் மின்சாரம், பயோ எத்தனால் உற்பத்தி போன்றவற்றிலும் 'ஆயில் இந்தியா' கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில், 78 எண்ணெய் கிணறுகளும், அடுத்த நிதியாண்டில் 81 எண்ணெய் கிணறுகளும், 2026-2027ம் நிதியாண்டில், 100 எண்ணெய் கிணறுகளும் அமைக்க திட்டமிட்டு உள்ளது. மேலும், கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாக குறைக்க, மாற்று எரிசக்தி துறையில், 2040ம் ஆண்டுக்குள் 25,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது.இத்தகைய தொடர்ச்சியான வலுவான செயல்பாடுகளால், ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஓராண்டில் 295 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பாண்டில் இந்நிறுவன பங்குகள் 200 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தை வளர்ச்சியோ 14 சதவீதம் என உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்குகளின் விலை நான்கு சதவீதம் உயர்ந்து, 767.30 ரூபாய் எனும் புதிய உச்சத்தை தொட்டது. முடிவில், விலை சற்று குறைந்து 740 ரூபாயாக நிறைவடைந்தது.