விற்காமல் ஸ்டாக்கில் உள்ள பொருட்களுக்கு புது எம்.ஆர்.பி., லேபிள் ஒட்ட அரசு உத்தரவு ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன் மக்களை சேர நடவடிக்கை
புதுடில்லி:ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, விற்கப்படாத பொருட்களின் விலையை குறைத்து, புதிய எம்.ஆர்.பி., லேபிள் ஒட்ட வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஜி.எஸ்.டி., நடைமுறை வரும் 22ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன்படி, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த பயன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக, வர்த்தகர்கள் வரி குறைப்புக்கு ஏற்றவாறு விலையை மாற்றியமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்ததாவது: உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், விற்கப்படாத பொருட்களின் எம்.ஆர்.பி.,யை புதிய ஜி.எஸ்.டி.,க்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, பேக்கேஜிங் செய்யப்பட்டுள்ள இந்த பொருட்களை விற்க, நடப்பாண்டு இறுதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்த விலை திருத்தம் ஜி.எஸ்.டி., குறைப்பை மட்டுமே பிரதிபலிக்க வேண்டும். இதை பயன்படுத்தி பொருட்களின் விலையை உயர்த்தக் கூடாது. ஏற்கனவே பேக்கிங் செய்யப்பட்டுள்ள பொருட்களில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஆர்.பி.,யை மறைக்கக் கூடாது. இதற்கு அருகில் புதிய எம்.ஆர்.பி., ஸ்டிக்கர் அல்லது முத்திரையை காட்சிப்படுத்த வேண்டும். இந்த விலை திருத்தம் தொடர்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செய்தித்தாள்களில், குறைந்தபட்சம் இரண்டு விளம்பரங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பழைய விலையை மறைக்காமல் அதன் அருகில் புதிய விலை ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.