ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போல் தரமான பொருட்கள் உற்பத்தி
சென்னை:''ஜெர்மனி, சுவிட்சர்லாந்துக்கு இணையாக, தமிழகத்தில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் தென் மாநில தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில், ஐரோப்பாவின் ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து நா டுகளை உள்ளடக்கிய இ.எப்.டி.ஏ., மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் ராஜா பேசியதாவது: தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திறமையான பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம். படித்த இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் மோட்டார் வாகன துறையில், வாகனம், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில், 40 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இணையாக, தமிழகத்தில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; இந்தியாவில் தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் தலைநகரமாக தமிழகம் விளங்குகிறது. புதிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பரந்துார் விமான நிலையம் விரைவாக அமைக்கப்படும். மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினார்.