ஓசூரில் நட்சத்திர ஹோட்டல்கள் டாடா குழுமம் அமைக்கிறது
சென்னை:ஓசூரில் உள்ள அரசு தொழில் பூங்கா அருகில், 'விவான்டா, 'ஜிஞ்சர்' என, இரண்டு சொகுசு நட்சத்திர ஹோட்டல்களை அமைக்க உள்ளதாக, டாடா குழுமத்தை சேர்ந்த, 'தாஜ்' உள்ளிட்ட ஹோட்டல்களை நடத்திவரும் ஐ.எச்.சி.எல்., எனப்படும், 'இந்தியன் ஹோட்டல்ஸ்' கம்பெனி நேற்று அறிவித்தது.விவான்டா ஹோட்டல் 150 அறைகளையும்; ஜிஞ்சர் ஹோட்டல் 200 அறைகளையும் கொண்டவையாக இருக்கும் என்றும், 3 ஏக்கரில் இந்த ஹோட்டல்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஐ.எச்.சி.எல்., நிறுவன துணை தலைவர் சுமா வெங்கடேஷ் இதுபற்றி கூறுகையில், ''பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களால், தமிழகத்தின் முன்னணி வணிக நகரமாக ஓசூர் வளர்ந்து வருகிறது. ''ஓசூர் தொழில் பூங்கா அருகில் இரண்டு ஹோட்டல்கள் அமைக்கப்படுவது, அந்த பகுதியில் செயல்படும் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும்,'' என்றார்.மின் வாகனம், எலக்ட்ரிக் சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. அம்மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.