உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது தைவான் வழக்கு தீர்ப்பை அமல்படுத்த அவகாசம்
ஜெனீவா: நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பொருள்கள் இறக்குமதி வரிக்கு எதிராக, தைவான் தொடர்ந்த வழக்கில், இந்தியாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அமலாக்கத்தை, டபிள்யு.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்ப்பு ஆணையம் தள்ளி வைத்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா, பல்வேறு ஐ.டி., பொருட்களுக்கு 20 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிப்பதை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பில் தைவான், கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்தியா கையெழுத்திட்டுள்ள ஐ.டி., ஒப்பந்தத்தை மீறி, இந்த வரிகள் விதிக்கப்படுவதாக தைவான் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்தியா, தாங்கள் கையெழுத்திட்டுள்ள ஐ.டி.-1 ஒப்பந்தத்தில் இடம் பெறாத பொருட்களுக்கு மட்டுமே வரி விதிப்பதாகவும், அப்பொருட்கள் இடம் பெறும் ஐ.டி., - 2 ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை எனவும் வாதாடியது. எனினும், வழக்கை விசாரித்த ஆணையம், இவ்விகாரத்தில் இந்தியா விதிமுறைகளை மீறியதாகவும், ஒப்பந்தப்படி ஐ.டி., பொருட்களுக்கு வரிகளை விலக்க வேண்டும் என்றும் கடந்த, 2023ல் தீர்ப்பு அளித்தது. இருந்தாலும், இந்த பிரச்னையை பேச்சு வாயிலாக தீர்க்க இந்தியாவும், தைவானும் விரும்புவதால், அதை ஏற்று, தீர்ப்பின் அமலாக்கத்தை வரும் அக்டோபர் வரை தள்ளி வைக்க ஆணையம் ஒப்புக்கொண்டது. இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. பல்வேறு ஐ.டி., பொருட்களுக்கு 20 சதவீதம் வரை இந்தியா இறக்குமதி வரி விதிப்பதை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பில் தைவான் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.