குண்டு வைத்த நபர் யார்? நேரில் பார்த்தவர் பேட்டி
புதுடில்லி: 'வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர், கையில் சூட்கேஸ் உடன் ஐகோர்ட்டுக்குள் வந்ததை பார்த்தேன். அடுத்த ஒரு சில நிமிடங்களில்தான் குண்டு வெடித்தது. அந்த நபர்தான் சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்' என, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்புக்கு, சூட்கேசில் வைக்கப்பட்ட வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கியிருக்கலாம் என, நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில், சூட்கேஸ் உடன் ஒருவர் வந்ததை பார்த்ததாக, ஐகோர்ட்டிற்கு வழக்கு ஒன்றில் பங்கேற்க வந்த, மகேந்தர் சிங் என்பவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், ஆஜராக வந்த மகேந்தர் சிங் என்பவர் கூறியதாவது: வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட்டிற்கு வந்தேன். நுழைவாயில் வரவேற்பு அறையில், ஐகோர்ட் உள்ளே செல்வதற்கு அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திருந்தனர். இந்த நடைமுறை எனக்கு தெரியாது. என் நண்பர் ஒருவருடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது, வரிசையை நோக்கி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் சூட்கேசை கையில் தூக்கிக் கொண்டு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அதன் பின்னர் நான் எதையும் பார்க்க முடியவில்லை. எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சம்பவம் நடந்த பின், போலீசார் வந்தனர். அதில் ஒரு போலீஸ்காரரிடம், கோர்ட்டை விட்டு வெளியே செல்ல உதவுமாறு கேட்டேன். அவரும் உதவினார். இவ்வாறு மகேந்தர் கூறினார்.