சுரங்க ஊழல் ஸ்ரீனிவாச ரெட்டி லாக்கர்களை திறந்து சி.பி.ஐ.,சோதனை
பெல்லாரி:சுரங்க ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனரும், ஓபுலாபுரம் சுரங்க நிறுவன நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாச ரெட்டியை, நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் பெல்லாரிக்கு அழைத்துச் சென்றனர். அவரின் பணப் பரிமாற்றங்கள் குறித்து வங்கிகளில் விசாரணை நடத்தியதோடு, லாக்கர்களில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையும் பறிமுதல் செய்தனர். சுரங்கத் தொழிலில் பல்வேறு முறைகேடுகள் செய்தது தொடர்பாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது மைத்துனரும், ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் கடந்த 5ம் தேதி, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்த கோர்ட், இருவரையும் நாளை (19ம் தேதி) வரை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், ஐதராபாத்தில் சி.பி.ஐ., காவலில் இருந்த ஸ்ரீனிவாச ரெட்டியை நேற்று, சி.பி.ஐ., எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், பெல்லாரிக்கு தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பெல்லாரியில் உள்ள ஆக்சிஸ் பேங்க் மற்றும் இதர வங்கிகளின் கிளைகளுக்கு அவரை அழைத்துச் சென்ற அவர்கள், அவரின் வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.மேலும், ஸ்ரீனிவாச ரெட்டிக்குச் சொந்தமான லாக்கர்களையும் திறந்து பார்த்தனர். தனியார் வங்கிகளில் உள்ள ரெட்டிக்கு சொந்தமான ஆறு லாக்கர்களை அவர்கள் சோதனையிட்டனர். சிலவற்றை திறக்க முடியாததால், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் திறந்து, சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, லாக்கர்களில் இருந்த 2கோடி ரூபாய் மதிப்பிலான நகை களை பறிமுதல் செய்யப் பட்டன. அத்துடன் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையிலான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் பெயரில், குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதும், பினாமி பெயர்களில் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு, அதன் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஸ்ரீனிவாச ரெட்டியின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு, தனியார் வங்கி அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்டதும் கவனத்திற்கு வந்துள்ளது.இது மட்டுமின்றி, பெல்லாரியிலிருந்து கடந்த 15ம் தேதி, லாரியில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 4.9 கோடி ரூபாய் பணம் குறித்தும், ஸ்ரீனிவாச ரெட்டியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.பணம் கடத்தி வர பயன்படுத்திய லாரியை ஓட்டியவர்கள், 'லாரியில் இருந்த பணம், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது. சுரங்கத் தொழிலுக்காக, கர்நாடகாவிலிருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளதால், இந்த விசாரணை நடைபெற்றது.'விசாரணைக்கு தயார்':கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் தொழில் கூட்டாளியும், அம்மாநில சட்டசபை எம்.எல்.ஏ., பதவியை கடந்த 4ம் தேதி ராஜினாமா செய்தவருமான ஸ்ரீராமுலு நேற்று பெல்லாரியில் நிருபர்களிடம் கூறுகையில், ''சுரங்க ஊழல் விசாரணை தொடர்பாக, சி.பி.ஐ., தரப்பில் இருந்து எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. நோட்டீஸ் வந்தால், வழக்கு விசாரணைகளில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.''ஊடகங்களில் கூறப்படுவது போல, தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தது செய்தது தான். எனது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் எனது கருத்துக்களை சட்டசபை சபாநாயகரிடம் கூறியுள்ளேன்,'' என்றார்.