உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜீப் கவிழ்ந்து விபத்து:சபரிமலை தந்திரி தப்பினார்

ஜீப் கவிழ்ந்து விபத்து:சபரிமலை தந்திரி தப்பினார்

ரான்னி:சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சென்ற ஜீப் கவிழ்ந்ததில், அதிர்ஷ்டவசமாக சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார். அவருடன் சென்றவர்களும் காயமின்றி தப்பினர்.கேரளா பெருநாடு பகுதி சபரிமலை சாலையில் மலை முகட்டில், அய்யப்ப சேவா சமாஜம் சார்பில், மணிகண்ட சரணாஸ்ரமம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் பிற்பகல் நடந்தது. இதில், சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்காக, அவர் தன் காரில் அங்கு சென்று, சபரிமலை பிரதான சாலையில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து மலைப்பகுதியில் 1 கி.மீ., தூரம் நடந்து சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் இறங்கினார். அவர் நடக்க சிரமப்படுவதை பார்த்த நிர்வாகிகள், அவரை ஜீப்பில் செல்லுமாறு கோரினர்.இதையடுத்து அவர், அங்கிருந்த ஜீப்பில் ஏறி, முன் சீட்டில் அமர்ந்தார். பின்பகுதியில், பந்தளம் அரண்மனை நிர்வாகி விசாகம் திருநாள் ராமவர்ம ராஜா, இந்து ஐக்கியவேதி மாநில பொதுச் செயலர் கும்மானம் ராஜசேகரன், பா.ஜ., மாவட்ட தலைவர் உண்ணி ஆகியோர் அமர்ந்தனர். சாலையில் ஜீப் ஆபத்தான வளைவில் திரும்பும்போது, எதிர்பாராத விதமாக ஜீப்பின் முன்பகுதி உயர்ந்து பின்னோக்கி கவிழ்ந்தது.இதில், டிரைவர் மீது தந்திரி சாய்ந்தார். இவ்விபத்து குறித்து அறிந்த பலரும் ஓடி வந்து தந்திரியை ஜீப்பில் இருந்து மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். அவரைப் போலவே அவருடன் அதே ஜீப்பில் பயணித்தவர்களும் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி