அமைச்சர் கபில் சிபலை முற்றுகையிட்ட மக்கள்
புதுடில்லி : டில்லி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், காயமடைந்தவர்களை பார்க்க சென்ற மத்திய அமைச்சர் கபில் சிபலை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால், அவர், காரில் இருந்து இறங்க முடியாமல் திரும்பிச் சென்றார். டில்லி ஜூம்மா மசூதி அருகே உள்ள சாந்தினி மகால் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஒரு கட்டடம் நொறுங்கி விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி, ஐந்து பேர் பலியாயினர்; 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இதன் மூலம், பலியானோரின் எண்ணிக்கை, ஏழாக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடக்கிறது. இந்த விபத்து தொடர்பாக, புதிய கட்டடத்தின் உரிமையாளர் அனில் மற்றும் கான்ட்ராக்டர் ஜலாலுதீன் மீது மரணத்துக்கு காரணமானவர்கள் என கூறி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள், லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக, இந்த தொகுதியின் எம்.பி., யும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கபில் சிபல், நேற்று மருத்துவமனைக்கு வந்தார். அவரை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால், போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரை விட்டு இறங்க முடியாத அளவுக்கு மக்கள் அவரை முற்றுகையிட்டதால், கடைசி வரை, அவரால் மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை. இதனால், திரும்பிச் சென்றார்.