புதுச்சேரியில் 15 டன் ரேஷன் அரிசி பதுக்கல் 2 பேர் கைது: கடலூர் மாவட்ட போலீஸ் அதிரடி
கடலூர் : புதுச்சேரி நவீன அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த, விழுப்புரம் மாவட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை, கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றி, இரண்டு பேரை கைது செய்தனர்.கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி கடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பதுக்கி வைத்து, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக, கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. உடன், இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், சப் -இன்ஸ்பெக்டர் பூபதி உள்ளிட்ட போலீசார், புதுச்சேரி குயவர்பாளையம் மற்றும் முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகளில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு அரிசி ஆலைகளில் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரிந்தது. உடன், முத்தியால்பேட்டை செந்தாமரைக்கண்ணன், 30, பாக்கமுடையான்பட்டு பாலன், 43 ஆகியோரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளை, விழுப்புரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.