பெங்களூரு, : கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், 'க்யூ.ஆர்., கோடு' மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி, சோதனை அடிப்படையில் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படுகிறது.கர்நாடக அரசில், கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் ஆகிய நான்கு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மேற்கண்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் டிக்கெட் சில்லரைக்காக கண்டக்டர், பயணியர் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சில நேரங்களில் கண்டக்டர் - பயணியர் ஒருவரையொருவர் தாக்குவதும் நடந்து வருகிறது.இதனால் சில்லரை பிரச்னையை தீர்க்க, போக்குவரத்து துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.பெங்களூரில் சில வழித்தடங்களில் இயங்கும் பி.எம்.டி.சி., பஸ்களிலும், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்களிலும் க்யூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அமலில் உள்ளது.அடுத்த வாரம் முதல் 150 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் சோதனை அடிப்படையில், க்யூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் கொடுக்கும் வசதியை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், அனைத்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களிலும் க்யூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படலாம்.