உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 40 ஆண்டுக்கு முந்தைய வழக்கு 3 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

40 ஆண்டுக்கு முந்தைய வழக்கு 3 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

மெயின்புரி, உத்தர பிரதேசத்தின் மெயின்புரியில், 24 தலித் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், 40 ஆண்டுகளுக்குப் பின், மூன்று பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில் உள்ள மெயின்புரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக, 1981ல் திஹுலி என்ற கிராமம் இருந்தது. அந்த ஆண்டு நவ., 18ல், இந்த கிராமத்துக்குள் நுழைந்த சந்தோஷ் சிங், ராதே ஷியாம் ஆகியோர் தலைமையிலான கொள்ளையர், கிராமத்தில் இருந்த தலித் மக்களை கொடூரமாக தாக்கினர். பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொள்ளையர், நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்தனர். இந்த விவகாரம், அரசியலில் அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், சந்தோஷ் சிங், ராதே ஷியாம் உட்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, சந்தோஷ் சிங், ராதே ஷியாம் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில், 13 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள நான்கு பேரில், கப்டன் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகியோர் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கு விசாரணை, மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் 40 ஆண்டுகளாக நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிபதி, தலித் மக்களை கொடூரமாக கொன்றதற்காக, கப்டன் சிங், ராம் சேவக் மற்றும் ராம் பால் ஆகியோரை குற்றவாளிகள் என, அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விபரம், வரும் 18ல் அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி