சைபர் குற்றங்களை தடுக்க தயாராகும் 5,000 கமாண்டோக்கள்
புதுடில்லி, நாட்டில் நடக்கும், 'சைபர்' குற்றங்களை திறம்படக் கையாள்வதற்காக, 5,000 சைபர் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்து அடுத்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு தயார்படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்களைக் கண்டறிந்து திறம்பட கையாள்வதற்காக, 'ஐ4சி' எனப்படும், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் 2020ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது. இதன் நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சி.எப்.எம்.சி., எனப்படும், சைபர் மோசடி குறைப்பு மையம், சைபர் கமாண்டோக்கள், ஒருங்கிணைப்பு இணையதளம், சந்தேக பதிவேடு உள்ளிட்ட நான்கு அம்சங்களை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:உலகம் முழுதும் நடக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் 46 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. நம் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய ஆசிர்வாதமாக உள்ள தொழில்நுட்பத்தை பொருளாதாரம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்துவதால், அச்சுறுத்தலாகவும் உள்ளது.எனவே தான், சைபர் பாதுகாப்பு என்பது 'டிஜிட்டல்' உலகுக்கு மட்டுமின்றி தேசிய பாதுகாப்புக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.நம்மை போன்ற பெரிய தேசத்தில் நடக்கும் விதவிதமான சைபர் குற்றங்களைக் கண்டறிய தேசிய அளவிலான சந்தேக பதிவேடு அவசியம். மாநில அளவில் உள்ள சந்தேக பதிவேடுகளால் பெரிய அளவில் பயன் இருக்காது. சந்தேக பதிவேட்டில் உள்ள தரவுகளின் அடிப்படையில், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் செயல்பாட்டை ஐ4சி கண்டறிய வேண்டும்.இன்றைக்கு துவங்கப்பட்டுள்ள சைபர் மோசடி குறைப்பு மையத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், போலீஸ் உட்பட அனைத்து துறையில் இருந்தும் பிரதிநிதிகள் இருப்பர். இனி நாடு முழுதும் நடக்கும் சைபர் குற்றங்கள் குறித்து இந்த ஒரு புள்ளியில் அனைவரும் தகவல் பெற முடியும். இதனால் சைபர் பாதுகாப்பும் மேம்படும்.சைபர் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களை திறம்படக் கையாள்வதற்காக, அடுத்த ஐந்தாண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் கமாண்டோக்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடக்கும் சைபர் குற்ற வழக்குகளில் உள்ளூர் போலீசாருக்கு உதவுவர்.இவ்வாறு அவர் பேசினார்.