உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலகாரங்கள் விற்று முன்னேறிய தம்பதி

பலகாரங்கள் விற்று முன்னேறிய தம்பதி

பெங்களூரு சிக்கமாவள்ளி பகுதியில், ரமேஷ் - ரேகா தம்பதி வசிக்கின்றனர். உழைத்து முன்னேற விரும்புவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்றனர். சிக்கமாவள்ளியின் எஸ்.கே., லைனில், ஒரு சிறிய கடை வைத்துள்ளனர். இங்கு காரம், இனிப்பு பலகாரங்கள் செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.முறுக்கு, தட்டை எனும் நிப்பட்டு, கோடுபலே, கடலை மிட்டாய், தயிர் முறுக்கு, பொறி உருண்டை, காரா முறுக்கு, அதிரசம், சோமாஸ் இப்படி 12 வகையான பலகாரங்கள் செய்கின்றனர். இரண்டு மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தினமும் காலை 8:00 மணிக்கு, கடையை திறந்துவிடுகின்றனர். இரவு 7:00 மணி வரை கடையிலேயே இருக்கின்றனர்.பலகாரங்கள் செய்ய செய்ய, விற்பனை ஆகிக் கொண்டே இருக்கின்றன. சுட சுட நம் கண் முன்னே செய்து தருவதால், தரத்திற்கு உத்தரவாதம் உள்ளது. சுவையாகவும் இருக்கிறது. சுத்தமான எண்ணெய் பயன்படுத்துகின்றனர்.வேலைக்கு யாரையும் சேர்த்துக் கொள்ளாமல், கணவன், மனைவி இருவரும் அயராது உழைக்கின்றனர். ரமேஷ், 13 ஆண்டுகளாக வேறு ஒருவரிடம் பலகாரங்கள் செய்யும் வேலை செய்து வந்தார். திருமணம் ஆன பின், சொந்தமாகவே தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தார்.ஏழு ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ சாய் ஹோம் புட்ஸ் என்ற பெயரில், பலகாரங்கள் செய்யும் தொழிலை மனைவி ஒத்துழைப்புடன் துவக்கினார்.ஆரம்பத்தில் விற்பனை மந்தமாக தான் இருந்தது. சுவை, தரம் அறிந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்ததால், தற்போது விற்பனை ஜோராக நடக்கிறது.ஒவ்வொரு பலகாரமும், தலா 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழைப்புக்கு ஏற்ற லாபமும் கிடைக்கிறது. இதனால், மைசூரில் சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டி உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு இதை விட வேறு சந்தோஷம் என்னவாக இருக்கும்.மனைவி ரேகா கூறியதாவது:நேரம், காலம் இல்லாமல் காலை முதல், இரவு வரை உழைக்கிறோம். நானும், என் கணவரும் சுய தொழில் செய்வதால், ஒரே இடத்தில் இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் பேராதரவால், வியாபாரம் நன்றாக உள்ளது.சில்லறை வியாபாரிகளை விட, ஊர் மக்களே அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். நாங்கள் அளிக்கும், தரமும், சுவையும் மட்டுமே காரணம். பெங்களூரு போன்ற நகரில், கணவர் மட்டுமே உழைப்பதால், குடும்பத்தை சமாளிப்பது மிகவும் கடினம். கணவர், மனைவி இருவரும் சேர்ந்து உழைப்பதால், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கிறோம்.மனதிற்கும் நிம்மதியை தருகிறோம். சொந்தமாக வீடு கட்டி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றவர்களும், கணவர், மனைவி இருவரும் சம்பாதித்தால், வாழ்க்கையில் விரைவாக முன்னேறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இவர்களின் கடை, பெங்களூரு சிக்கமாவள்ளி மாரம்மா கோவில் அருகில் உள்ளது. தேவைப்படுவோர், 9886803764 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ