மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மும்முரம்
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியினரை ஊக்குவிப்பதிலும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரம் செய்வதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கவனம் செலுத்துவார் என, ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது குறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்துவதிலும், மக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்துவார்.ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சி பலவீனமடைந்துள்ளதாக அவர் கருதுகிறார். அதனால் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள ஹரியானாவில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார்.ஜம்மு - காஷ்மீரிலும் ரோடுஷோ நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.டில்லியை பொ றுத்தவரையில், வார்டு வாரியாக பெரிய அளவில் வீடு வீடாக பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.வரும் பிப்ரவரியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கலாம். அதற்கு முன்பு, நான்கு மாதங்கள் உத்திகளை வகுத்து, ஆம் ஆத்மியின் வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.