உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜமலைக்கு மின்சார பஸ்கள் இயக்கும் திட்டம்: செப்.13 ல் துவக்கம்

ராஜமலைக்கு மின்சார பஸ்கள் இயக்கும் திட்டம்: செப்.13 ல் துவக்கம்

மூணாறு:ராஜமலைக்கு வனத்துறை சார்பில் மின்சார பஸ்கள் இயக்கும் 'கார்பன் நியூட்ரல் இரவிகுளம்' திட்டத்தை கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் செப்.13ல் துவக்கி வைக்கிறார்.இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். அங்கு செல்லும் பயணிகள் 5ம் மைல் பகுதியில் நுழைவு சீட்டு பெற்று வனத்துறையினருக்குச் சொந்தமான மினி பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது ஒன்பது மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதுடன் கடந்த பத்து ஆண்டுகளில் ஆறு லட்சம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்பட்டது. அதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், வாகனங்களின் சப்தம் வன விலங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.அதனை முற்றிலுமாக தவிர்க்க மின்சார வாகனங்களை பயன்படுத்தும் வகையில் சோதனை அடிப்படையில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. அத்திட்டம் வெற்றி பெற்றதால் 'கார்பன் நியூட்ரல் இரவிகுளம்' திட்டம் மூலம் மின்சார பஸ்களை இயக்க வனத்துறையினர் முன் வந்தனர். தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பில் ஒன்பது மினி பஸ்கள் வழங்கப்பட்டன.அத்திட்டம் உட்பட பல்வேறு வசதிகளை கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் செப்.13ல் துவக்கி வைக்கிறார். பூங்கா முழுவதும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்துவது நோக்கம் என மூணாறு வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர் நிதின்லால் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி