உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல தொழில் அதிபரின் ரூ.78 கோடி சொத்து முடக்கம் கடன் மோசடி

பிரபல தொழில் அதிபரின் ரூ.78 கோடி சொத்து முடக்கம் கடன் மோசடி

புதுடில்லி, யெஸ் வங்கியில், 466 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் கவுதம் தாப்பருக்கு சொந்தமான 78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது.ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக வைத்து செயல்படும் அவென்தா ரியால்டி நிறுவனத்திற்கு, யெஸ் வங்கி கடந்த 2018ல், 514 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இந்தக் கடனை, 2019ல் வாரா கடனாக அவ்வங்கி அறிவித்தது. சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், யெஸ் வங்கி வழங்கிய கடனை, அவென்தா ரியால்டி நிறுவனத்தின் நிறுவனரும், தொழிலதிபருமான கவுதம் தாப்பர் மற்றும் மூத்த நிர்வாகிகள் முறைகேடாக பயன்படுத்தியதுடன், அவர்களின் துணை நிறுவனமான ஒய்ஸ்டர் பில்டுவெல் என்ற நிறுவனத்திலும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தெரியவந்தது.இதையடுத்து, கடந்த 2020ல் கவுதம் தாப்பர் மற்றும் அவென்தா ரியால்டி நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ., அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. இதில், யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூருக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்து, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, 2021ல் அமலாக்க துறையும் சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கவுதம் தாப்பருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதுடன், அவரையும் கைது செய்தது.இதுவரை யெஸ் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகையில், 47.75 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 466 கோடி ரூபாய் கடன் தொகை நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில், கவுதம் தாப்பரின் மற்றொரு நிறுவனமான ஒய்ஸ்டர் பில்டுவெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான குருகிராமில் உள்ள 52.11 ஏக்கர் பரப்பளவு நிலத்தை, அமலாக்க துறை நேற்று முடக்கியது. இதன் மதிப்பு, 78 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, டில்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை