வனநிலம் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் போராட்டம்
துமகூரு: வனநிலம் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்காத அதிகாரிகளை கண்டித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.துமகூரின் குப்பி - துருவகெரே தாலுகா எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளது பிலேநந்தி கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி, பிலேநந்தி வனப்பகுதி உள்ளது.கடந்த சில மாதங்களாக, வனப்பகுதிக்கு உட்பட்ட நிலத்தை வேறு மாவட்டத்து நபர்கள் ஆக்கிரமித்து, விவசாயப் பணி செய்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்கும் பிலேநந்தி கிராம மக்களை மிரட்டி உள்ளனர்.வனநிலம் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தால், 'இரு தாலுகாக்களை சேர்ந்த அதிகாரிகளும், இந்த இடம் எங்கள் பகுதிக்கு வராது' என கூறி, பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வன நில ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிலேநந்தி கிராம மக்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற துருவகெரே போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர்.'வன அதிகாரி வந்து உறுதிமொழி கொடுத்தால் தான் கலைந்து செல்வோம்' என அவர்கள் கூறினர். அங்கு வந்த வனத்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.