தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் நான்கு பேர் பலி
மும்பை: மஹாராஷ்டிராவில் கட்டுமான பணியின் போது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் நான்கு பேர், மூச்சுத்திணறி பலியாகினர்.மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள நாக்படா பகுதியில் திம்டிம்கர் சாலை உள்ளது. இங்குள்ள பிஸ்மில்லா ஸ்பேஸ் கட்டடத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. மும்பை உட்பட பல பகுதிகளில் இருந்து வந்த தொழிலாளர்கள், இங்கு வேலை செய்து வந்தனர். இங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஐந்து தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.அப்போது, அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்தனர். அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க்கப்பட்டனர். இதில், நால்வர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.விஷவாயு தாக்கி நால்வரும் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், பணி இடத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.