உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளி பதக்கம் பெற்று தந்த கிரிஷா நஞ்சேகவுடா

வெள்ளி பதக்கம் பெற்று தந்த கிரிஷா நஞ்சேகவுடா

ஹாசன் மாவட்டம், ஹொசநகரின் அரகலகூடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1988ல் இடது காலில் ஊனத்துடன் பிறந்தவர் கிரிஷா நஞ்சேகவுடா.மாற்றுத் திறனாளியாக பிறந்ததால், இவரால் எதிர்காலத்தில் குடும்பத்தை நடத்த முடியுமா என பல கேள்விகளை உறவினர்கள் கேட்டனர். இதற்கு ஒரே பதிலாக, 'மற்ற குழந்தைகள் போன்று என் மகன் வளருவான். குடும்பத்துக்கு சாபமாக இருக்கமாட்டான். இச்சமூகத்தில் ஒரு திறமையான நபராக மாற்றி காட்டுகிறேன்' என்று தாயார் ஜெயம்மா, கணவர் நாகராஜே கவுடாவிடம் தெரிவித்தார்.

ஆர்வம்

ஹொசநகரில் பள்ளி படிப்பை முடித்த கிரிஷா, பன்னுாரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இங்கு தான், விளையாட்டுகளில் பங்கேற்க துவங்கினார். சில போட்டிகளில் வெற்றி பெற்று, பலரை ஆச்சரியப்படுத்தினார்.சாதாரண மாணவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவர் பங்கேற்க கூடாது என்று போட்டியில் பங்கேற்ற சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கிரிஷாவுக்கு ஆதரவாக பேசிய உடற்பயிற்சி ஆசிரியர், தொடர்ந்து விளையாட அனுமதித்தார்.குடகு மாவட்டத்தில் கல்லுாரியில் படித்த போது, மைசூரு பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2006ல் அயர்லாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றார். அதை தொடர்ந்து குவைத், மலேஷியாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

பெங்களூரில் பயிற்சி

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், விளையாட்டை ஒரு தொழிலாக தொடர உதவும், 'பாரா ஒலிம்பிக் அகாடமி' பெங்களூரில் இருப்பது குறித்து தெரிந்து கொண்டார். இங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த அவர், பல போட்டிகளில் பதக்கங்கள் குவித்தார். லண்டனில் 2012 ல் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர், வெள்ளிப் பதக்கம் பெற்றார்.மாவனஹள்ளி தபால் ஊழியர் ஹரிஷ் கூறியதாவது:லண்டன் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற கிரிஷாவின் சாதனையால், உலகளவில் இக்கிராமம் புகழ் பெற்றது.நேராக நடக்க முடியாத கிரிஷாவால் என்ன செய்ய முடியும் என்று கிராமத்தினர் பலர் நினைத்தனர். ஆனால் 'டிவி' சேனல்கள், பத்திரிகை ஊடகங்கள் கிரிஷாவின் குடும்பத்தை படம் பிடிக்க வரிசையில் நிற்பதை, கிராமத்தினர் பெருமையாக கருதுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

திறமைசாலி

கிரிஷா நஞ்சே கவுடா கூறியதாவது:உடல் ரீதியாக மாற்றுத் திறனாளியாக இருப்பதை துரதிர்ஷ்டமாக நினைக்கவில்லை. மாறாக திறமைசாலியாக உணர்கிறேன். அவ்வாறு இல்லை என்றால், நான் பாரா ஒலிம்பிக் வீரனாக இருந்திருக்க மாட்டேன்.தடகளம் தான் என் வாழ்க்கை. போட்டிகளில் பங்கேற்பது எனக்கு பிடிக்கும். ஆரம்ப நாட்களில், நம் நாட்டில் உள்ள மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் போதுமான புகழோ, மரியாதையோ எனக்கு கிடைக்காதது வருத்தமாக இருந்தது.பாரா ஒலிம்பிக் வீரர்களாக நாங்கள் அதற்கு பழகிவிட்டோம். ஆனால் இந்த அறியாமை, எனது செயல் திறனை பாதிக்க, ஒரு போதும் அனுமதிக்கவில்லை. என் பதக்கம், முயற்சியை மத்திய அரசு அங்கீகரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ