3ம் பாலினத்தவரும் இருக்கையை தேர்வு செய்ய இண்டிகோ வசதி
புதுடில்லி: மூன்றாம் பாலினத்தவர் தங்கள் இருக்கையை தேர்வு செய்யும் வகையில் டிக்கெட் முன்பதிவு திட்டத்தில் மாற்றம் செய்ய இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.விமான சேவையில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளதால், ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் வகையில் அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றன.அந்த வகையில், இண்டிகோ விமான நிறுவனம், டிக்கெட் முன்பதிவின் போது, தனியாக பயணம் செய்யும் பெண்கள் இருக்கைகளை தேர்வு செய்யும் வகையிலான மாற்றத்தை அறிமுகப்படுத்தியது.இந்நிலையில், முன்பதிவின் போது ஆண் மற்றும் பெண் மட்டுமே தங்கள் இருக்கைகளை தேர்வு செய்ய வசதியுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவரும் இருக்கைகளை தேர்வு செய்யும் வகையிலான மாற்றத்தை இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுக்ஜித் பாஸ்ரிச்சா கூறியதாவது:எங்கள் இணையதளத்தில் ஆண் - பெண் மட்டுமே தங்கள் இருக்கைகளை தேர்வு செய்யும் முறை தற்போது உள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மூன்றாம் பாலினத்தவர் பயணம் செய்ய வசதியாக இதில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.விரைவில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும். எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ-., எனப்படும் தன் பாலின ஈர்ப்பாளர்களும் இந்த முறையில் பயணிக்கலாம்.இந்த சமூகத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பில் எங்கள் நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. இவர்களை பணியில் அமர்த்துவதற்காகவே பிரத்யேக ஏஜன்சிகளுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.மொத்தமுள்ள 36,000க்கும் மேற்பட்ட ஊழியர்களில், 240 பேர் மாற்றுத்திறனாளிகள். வரும் நிதியாண்டில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏர் இந்தியா, விஸ்தாரா நிறுவனங்கள் மூன்றாம் பாலினத்தவர் பயணிக்கும் வகையில் தங்கள் முன்பதிவு முறையை ஏற்கனவே மாற்றியுள்ள நிலையில், இண்டிகோவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.