உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமியிடம் விசாரணை: கவர்னர் மாளிகை கைவிரிப்பு

குமாரசாமியிடம் விசாரணை: கவர்னர் மாளிகை கைவிரிப்பு

பெங்களூரு: 'மத்திய அமைச்சர் குமாரசாமி மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, லோக் ஆயுக்தா சார்பில் அனுமதி கோரிய கோப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை' என்று, கவர்னர் மாளிகை கைவிரித்து உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. மைசூரு, 'மூடா'வில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அவர் மீது விசாரணை நடத்த அனுமதிக்கும்படி, சமூக ஆர்வலர்கள் சினேகமயி கிருஷ்ணா, ஆபிரகாம் ஆகியோர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர். இதையடுத்து முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்தார். கவர்னரை கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறது.

குத்தகை

இதற்கிடையில், கடந்த 2007ல் குமாரசாமி முதல்வராக இருந்த போது, பல்லாரி சண்டூரில் 550 ஏக்கர் கனிம சுரங்கத்தை, சட்டவிரோதமாக குத்தகைக்கு அளித்தாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே விசாரணை நடத்தினார். இதில் குமாரசாமி சட்டவிரோதமாக கனிம சுரங்கத்தை குத்தகை கொடுத்தது தெரிந்தது. அதன்பின் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்ததால், சுரங்க குத்தகை வழக்கை யாரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி, கடந்த ஆண்டு நவம்பரில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், லோக் ஆயுக்தா கோரிக்கை வைத்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்குவதற்கு, கவர்னர் சில ஆதாரம் கேட்டு இருந்தார். அந்த ஆதாரங்களையும் சில நாட்களுக்கு முன்பு, லோக் ஆயுக்தா சமர்ப்பித்தது.

காங்., மனு

ஆனாலும் குமாரசாமி மீது விசாரணைக்கு உத்தரவிட, கவர்னர் காலதாமதம் செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுகிறது. நேற்று முன்தினம் துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், கவர்னரை சந்தித்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,ககள், தலைவர்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் சசிகலா ஜொல்லே, முருகேஷ் நிரானி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த அனுமதிக்கும்படி மனு அளித்தனர்.இதற்கிடையில், 'மூடா' வழக்கில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னரின் முடிவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு செய்தார். அந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.சமூக ஆர்வலர் ஆபிரகாம் சார்பில் ஆஜரான வக்கீல் ரங்கநாத் ரெட்டி வாதாடுகையில், ''முதல்வர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில், கவர்னர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது போல மத்திய அமைச்சர் குமாரசாமி, மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு கவர்னரிடம், லோக் ஆயுக்தா சமர்பித்த கோப்புகள் எதுவும் தற்போது நிலுவையில் இல்லை,'' என்றார்.

பரிசீலனை

''இது பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்,'' என்று நீதிபதி நாகபிரசன்னா கேள்வி எழுப்பிய போது, ''எனது மனுதாரர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், குமாரசாமி, மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணை கோப்புகள் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். ''அதற்கு கோப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை என, கவர்னர் அலுவலகம் விளக்கம் அளித்து உள்ளது,'' என்று, வக்கீல் ரங்கநாத் ரெட்டி கூறினார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கவர்னர் அலுவலகத்தில் இருந்து ஆபிரகாம் இந்த தகவலை பெற்றதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, காங்கிரசார் மனு அளித்த போது, கவர்னர் எதுவும் சொல்லவில்லையா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''குமாரசாமி, மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, நாங்கள் மனு அளித்த போது பரிசீலிப்பதாக கவர்னர் கூறினார். இப்போது நிலுவையில் எந்த கோப்புகளும் இல்லை என்று ராஜ்பவன் கூறி உள்ளது. என்ன நடந்தது என்று சரிபார்ப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை