அமைச்சர்கள் மதிப்பதில்லை என எம்.எல்.ஏ.,க்கள் புகார்
பெங்களூரு; பட்ஜெட் கூட்டம் தொடர்பாக கூட்டப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதல்வர் சித்தராமையா சமாதானப்படுத்தினார்.பட்ஜெட் குறித்த பா.ஜ.,வினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது தொடர்பாக, நேற்று முன்தினம் பெங்களூரில் தனியார் ஹோட்டலில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கேட்பதில்லை
அப்போது எம்.எல்.ஏ.,க்கள், 'ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அமைச்சர்களுக்கு புத்தி வரவில்லை. வருவாய் துறையில், கவுன்சலிங் மூலம் துணை பதிவாளர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் இடமாற்றம் முறையாக செய்யப்படவில்லை. முன்பு போன்று, எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசின்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும்' என்றனர்.வழக்கமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே தான் வார்த்தைப்போர் ஏற்படும். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜுக்கும், மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அமைச்சர் போசராஜு, 'நான் ராய்ச்சூரை சேர்ந்தவன். என்னை கேட்காமல், என் மாவட்ட அதிகாரிகளுக்கு எப்படி இடமாற்றம் உத்தரவு கடிதம் கொடுக்கலாம்' என்றார்.இதற்கு அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், 'நான் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது என் கடமை.அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக என்னிடம் கேட்டனர்; நான் கடிதம் வழங்கினேன்' என்றார். இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் இடைமறித்து, அவர்களை சமாதானப்படுத்தினார்.எம்.எல்.ஏ., ரவி கனிகா, 'பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விட, பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்களுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார். பொதுப்பணி துறை பணிகளில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு, நிலுவையில் உள்ள பில் தொகையை வழங்குகிறார்' என்றார்.பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:இம்முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை 'முஸ்லிம் பட்ஜெட்' என்று பா.ஜ., - ம.ஜ.த., விமர்சனம் செய்துள்ளனர். எஸ்.சி., - எஸ்.டி.,யினர் சமூகத்தினருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியிருப்பது தவறு. ரூ.70,000 கோடி
ஜெயின் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எதற்கும் பயப்பட வேண்டாம். எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டுக்கு, 8,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், அவரவர் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.நடப்பாண்டு வாக்குறுதி திட்டங்கள், ஏழாவது ஊதிய கமிஷனுக்கு 70,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஏப்ரலில் அனைவருக்கும் தொகுதி நிதி கிடைக்கும்.கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், கட்சி தொண்டர்களின் குறைகளை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள். 100 கட்சி அலுவலகம் கட்டப்பட வேண்டும். இதற்கு மாவட்ட அமைச்சர்களே பொறுப்பாளி.லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 22ம் தேதி, ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நானும், துணை முதல்வர் சிவகுமாரும் செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.