ஜெனிவா, ''கடந்த 1984ல், காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் கடத்திய விமானத்தில் என் தந்தையும் இருந்தார். ஒரு பக்கம் அரசு அதிகாரியாகவும், மற்றொரு பக்கம், குடும்ப உறுப்பினராகவும் இருக்க வேண்டிய நிலை இருந்தது,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்துக்கு, அரசு முறைப் பயணமாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். ஜெனிவாவில், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது, நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில், சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி., - 814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:இந்த வெப் தொடரை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், என் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். 1984ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர். அப்போது, இந்திய வெளியுறவு துறையில் நான் இளம் அதிகாரி. இதை கையாளும் குழுவில் நானும் இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வர முடியாது' எனக் கூறினேன்.பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதை கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை. இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒரு புறம், கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் நான் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தலுக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன்.இவ்வாறு அவர் கூறினார். கடந்த 1984 ஆக., 24ல், டில்லியில் இருந்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் துபாய்க்கு கடத்திச் சென்றனர். 36 மணி நேரத்திற்கு பின், 12 காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் சரணடைந்தனர். விமானத்தில் இருந்த 68 பயணியர் மற்றும் ஆறு பணியாளர்கள் காயமின்றி விடுவிக்கப்பட்டனர்.
'நாங்கள் சொல்வதையும் கேளுங்கள்'
ஜெனிவாவில் இந்திய வம்சாவளியினருடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை, வெளிநாடுகளைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் சந்தித்து பேசுவது குறித்து கேள்வி எழுக்கப்பட்டது. அப்போது அவர், ''எங்கள் அரசியல் பற்றி மற்றவர்கள் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில், அவர்களது அரசியல் குறித்து நாங்கள் பேசுவதை கேட்பதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என்றார்.