அனைவருக்கும் பென்ஷன்: மத்திய அரசு புதிய திட்டம்
புதுடில்லி: வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், கட்டட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொது பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்த பின், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, அரசு சார்பில் பல்வேறு பென்ஷன் திட்டங்கள் அறிமுகமாகின. இதில், 60 வயதுக்கு மேல் மாதந்தோறும், 1,500 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் அடல் பென்ஷன் யோஜனா, 60 வயதை கடந்த விவசாயிகள் மாதந்தோறும், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் பிரதான் மந்திரி கிஸான் மந்தன் யோஜனா, சாலையோர வியாபாரிகளுக்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா போன்ற பென்ஷன் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், அனைத்து தரப்பினருக்குமான 'பொது பென்ஷன் திட்டம்' ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் பெரிய அளவிலான பென்ஷன் திட்டங்கள் எதுவும் இல்லை. இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் சுய தொழில் புரிவோர், அனைத்து விதமான மாத சம்பளதாரர்கள் என அனைத்து தரப்பினருமே இணையலாம். நம் நாட்டின் சேமிப்பு கட்டமைப்பை சீரமைப்பதற்காக, ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் இந்த திட்டமும் அறிமுகமாகிறது. இந்த திட்டத்தில் அரசின் பங்களிப்பு எதுவும் இருக்காது. தன்னார்வ அடிப்படையில், அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த பாதுகாப்பு வாய்ப்பாக இந்த திட்டம் இருக்கும். தற்போது அமலில் இருக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் எதையும் இதனுடன் இணைக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. இது, முழுக்க முழுக்க தன்னார்வ ஓய்வூதிய திட்டமாகும். திட்டம் குறித்து முறைப்படி அறிவிக்கப்பட்ட பின், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.