அப்படியே... சரிந்த 2 மாடி வீடு! நொடியில் நிகழ்ந்த பயங்கரம்! அலறிய மக்கள்
புதுடில்லி; தலைநகர் டில்லியில் 2 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.கரோல் பாக் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமான பணிகளில் அனைவரும் பரபரப்பாக இருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள 2 மாடிகள் கொண்ட வீடு திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் அங்கிருந்தவர்கள் அப்படியே இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். முதல்கட்டமாக உள்ளே இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 பேரை மீட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கட்டிடம் இடிந்தது குறித்து தகவல் அறிந்த முதல்வர் அதிஷி, உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டிடம் எப்படி விழுந்தது என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.