உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது

வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது

பெங்களூரு : ''வாக்குறுதி திட்டங்களை அறிவிக்கும் முன்பே, அதிகமாக ஆலோசித்தோம். எந்த காரணத்தை கொண்டும், திட்டங்கள் நிறுத்தப்படாது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதால், ஓரளவு நிதி நெருக்கடி ஏற்படும் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இவ்வளவு பணத்தை செலவிடுவதால், ஆய்வு செய்வது அவசியம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும். பசித்த வயிற்றுடன் உள்ள மக்களுக்கு, வேறு எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும், பலன் இருக்காது.வாக்குறுதி திட்டங்களை நிறுத்துவது சரியல்ல என, அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், வாக்குறுதி திட்டங்கள் குறித்து, அதிகம் சர்ச்சை நடந்தது. திட்டங்கள் நிறுத்தப்படும் என, பா.ஜ., அவப்பிரசாரம் செய்தது. இதற்கு நான், முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவரும் தெளிவுபடுத்தினோம்.வாக்குறுதி திட்டங்களை, செயல்படுத்துவதற்கு முன், ஆழமாக ஆலோசனை நடத்தினோம். வறுமையை ஒழிப்பது எங்களின் குறிக்கோள். இந்த நோக்கத்தை விட்டு கொடுக்க முடியாது. கிராமங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள், மிகவும் கஷ்டப்படுகின்றனர். ரூபாய் நோட்டு ரத்து, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் ஏழைகள் பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினோம். தற்போது அமைச்சரவையில் காலியாக உள்ள ஒரு அமைச்சர் இடத்தை நிரப்புவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார். கட்சி மேலிடத்துடன் கலந்து ஆலோசித்து, என்ன முடிவு எடுப்பாரோ, எடுக்கட்டும். இது பற்றி நான் பதிலளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ