ரேணுகாசாமி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா
சித்ரதுர்கா: நடிகர் தர்ஷனால் கொலை செய்யப்பட்ட, ரேணுகாசாமியின் குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டு விழா நடந்தது.சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவர், நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். இதனால் கடந்த ஆண்டு ஜூன் 10 ம் தேதி சித்ரதுர்காவில் இருந்து ரேணுகாசாமியை பெங்களூருக்கு கடத்தி வந்து தர்ஷனும், அவரது கூட்டாளிகளும் கொலை செய்து, உடலை கால்வாய் அருகே வீசினர்.இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட போது, அவரது மனைவி சஹானா, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா, ரேணுகாசாமியின் தந்தை வீட்டில் நேற்று நடந்தது. சசிதர் சாமி என்று பெயர் சூட்டினர். மகனே மறுபடியும் பிறந்து விட்டதாக கூறி, பேரனை துாக்கி ரேணுகாசாமியின் தந்தை காசிநாதர் சிவனகவுடர் கொஞ்சினார். பேரனுக்கு கையில் மோதிரம், தங்கச்செயின் அணிவித்தார். இந்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.