உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போபர்ஸ் வழக்கில் உதவ அமெரிக்காவுக்கு கோரிக்கை

போபர்ஸ் வழக்கில் உதவ அமெரிக்காவுக்கு கோரிக்கை

புதுடில்லி:'போபர்ஸ்' பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பாக அமெரிக்க தனியார் துப்பறியும் நிபுணரிடம் இருந்து தகவல்களை பெற்று தருவதற்கு உதவும்படி, நீதிமன்றம் வாயிலாக சி.பி.ஐ., கோரிக்கையை அனுப்பியுள்ளது.நம் ராணுவத்துக்கு, 1980களில், ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, 'போபர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, 400 பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம், 1,437 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு, இந்திய அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு, 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஓட்டாவியோ குவாத்ரோச்சி வாயிலாக இந்த லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.நிராகரிப்புஇது, அப்போது பிரதமராக இருந்த காங்.,கின் ராஜிவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 1990ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. கடந்த 1999 மற்றும் 2000ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, 1991ல் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்ததால், இந்த வழக்கில் இருந்து, ராஜிவை விடுவித்து, டில்லி உயர் நீதிமன்றம் 2004ல் உத்தரவிட்டது.லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, 2005ல் டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில், 2018ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் அது நிராகரிக்கப்பட்டது.அதே நேரத்தில், அஜய் அகர்வால் என்ற வழக்கறிஞர், 2005ல் தொடர்ந்த வழக்கில், சி.பி.ஐ., இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிபுணர் மைக்கேல் ஹெர்ஸ்மேன், 2017ல் தனியார் துப்பறிவு நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார். அப்போது, போபர்ஸ் ஊழல் தொடர்பாக பல தகவல்கள் தன்னிடம் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும் இந்திய அரசுக்கு உதவுவதாகவும் அவர் கூறியிருந்தார்.கரன்சி கட்டுப்பாடு சட்டங்கள் மீறப்படுவது தொடர்பாகவும், வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்யும் பண மோசடி மற்றும் அதன் வாயிலாக வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க, 1986ல் மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மைக்கேல் ஹெர்ஸ்மேன் உதவி நாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பதில் இல்லைஇது தொடர்பாக பேட்டியில் குறிப்பிட்ட அவர், அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணைக்கும், போபர்ஸ் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.இதையடுத்து, அவருடன் தொடர்பு கொள்ளவும், அவரிடம் இருந்து தகவல்களை பெறவும், சி.பி.ஐ., முயற்சி செய்தது. இது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கு, மத்திய அரசு பல முறை கடிதங்கள் எழுதின. ஆனால், அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை.மைக்கேல் ஹெர்ஸ்மேன் அறிக்கை ஏதாவது தாக்கல் செய்துள்ளாரா என்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கேட்டிருந்தது. ஆனால், அதுபோன்று எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை.இதையடுத்து, ஹெர்ஸ்மேனிடம் விசாரணை நடத்தவும், அவரிடம் இருந்து தகவல்களை கேட்டுப் பெறவும், 'லெட்டர்ஸ் ரொடேடரி' அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, இந்திய நீதிமன்றத்திடம் இருந்து, அமெரிக்க நீதிமன்றத்துக்கு முறையாக கோரிக்கை வைப்பதே, லெட்டர்ஸ் ரொடேடரி.இதன்படி, சமீபத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

B MAADHAVAN
மார் 06, 2025 07:22

தகவல் கேட்டு அதை பெறுவதற்கு முன்பாகவே, என்ன என்ன எப்படி செய்ய வேண்டுமோ, அதை இந்நேரம் கான் கிராஸ் அதை அப்படியே செய்து விடும். இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் முடித்த அவர்களுக்கு, மேற்கொண்டு வளர விடாமல் தடுக்க தெரியாத என்ன. நாட்டிற்கு நல்லது செய்ய தெரியாவிட்டாலும், இது போன்ற வேலைகள் செய்வதற்கு மட்டும் அவர்களது திறமை வெளிப்படும்.


Laddoo
மார் 06, 2025 07:14

சோனியாவுக்கு இந்த வழக்கு தலைவலியாகுமா? சாம் பிட்ரோடா மூலம் சரி செய்து கொள்வாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை