மேலும் செய்திகள்
கன்னட ஜோதி யாத்திரை தங்கவயல் வருகை
02-Aug-2024
பெங்களூரு:தமிழர் - கன்னடர் ஒற்றுமை மாநாடு குறித்து, பெங்களூரில் பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ''கர்நாடக தமிழர்களான நாம், நம்மை நாமே பாதுகாக்கும் நிலை உள்ளது,'' என்று மாநாட்டை நடத்தும் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்தார்.பெங்களூரு அரண்மனை மைதானத்தில், அக்டோபர் 20ம் தேதி தமிழர் - கன்னடர் ஒற்றுமை மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டை நடத்துவது குறித்து, ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, யாதவா சங்கத்தில் நேற்று தமிழ் ஆர்வலர் எஸ்.டி.,குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னதாக, மாநாட்டிற்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இதன் இடது புறம் திருவள்ளுவர், வலது புறம் சர்வக்ஞர் படங்கள் இடம்பெற்றுள்ளன.எஸ்.டி.குமார் பேசியதாவது:ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றால் கட்டமைப்பு அவசியம். நாம் நடத்த இருக்கும் மாநாடு பற்றி, கர்நாடகா வாழ் தமிழர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பல்வேறு தமிழ் அமைப்புகளை சந்தித்து வருகிறோம். 10 குழுக்கள்
மாநாட்டை வெற்றிகரமாக நடத்த, குழு அமைப்பது அவசியம். மத்திய குழு, மேடை நிர்வாக குழு, மேடை நிர்வாக துணை குழு, உணவு குழு, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் குழு, முக்கிய பிரமுகர்கள், தமிழ் அமைப்புகளை வரவேற்கும் குழு, இடவசதி ஏற்படுத்தி கொடுக்கும் குழு, கண்காட்சியை நிர்வகிக்கும் குழு, விளம்பர குழு உட்பட 10க்கும் மேற்பட்ட குழுக்களை அமைக்க உள்ளோம். இங்கு வந்து இருப்போர், எந்த குழுவில் இணைய உள்ளீர்கள் என்று கூறுங்கள். வெளிப்படை
குழுவில் ஷிவமொகா, தங்கவயல், பத்ராவதி தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு அளிக்கப்படும். நமது மாநாடு பற்றி, தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களிடம் கூறுங்கள். அவர்கள் நமக்கு உதவி செய்ய வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். மாநாடு முடிந்த பின் வரவு, செலவு கணக்குகளை வெளிப்படையாக காட்டுவோம்.மாநாட்டில் தமிழ், கன்னட கலாசாரத்தை பின்பற்றுவோம். அரசியல் நிகழ்ச்சியாக இருக்க வேண்டாம். தமிழக அரசையும் புறக்கணிக்க வேண்டாம். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது பாசம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், நடிகர்களை நாம் நேசிக்கிறோம். ஆனால், அவர்கள் நம்மை நேசிக்கவில்லை. கர்நாடக தமிழர்களான நாம், நம்மை நாமே பாதுகாக்கும் நிலை உள்ளது. ஸ்டாலின், ரஜினி
மாநாட்டு மலரில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினியிடம் வாழ்த்துரை வாங்க முயற்சி செய்வேன். பொருளாதார ரீதியாகவும், தமிழ் பற்று உள்ளவர்களிடம் உதவி கேளுங்கள். அடுத்த ஆலோசனை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில், புதிய விஷயங்கள் பற்றி பேச வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆலோசனையில் கலந்து கொண்ட சிலர், தாங்கள் எந்தெந்த குழுக்களில் பங்கேற்க போகிறோம் என்று கூறினர். அவர்களின் பெயர்கள், மொபைல் போன் நம்பர்கள் சேகரிக்கப்பட்டன.கூட்டத்தில், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் செயலர் ஸ்ரீதரன், தமிழ்ச்சங்க துணை பொருளாளர் கோபிநாத், பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேந்திரன், தன்னுரிமை மனமகிழ் மன்றம் செயலர் ராஜசேகர், ஆதர்ஷா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பொது செயலர் சி.சம்பத்,கர்நாடக தமிழ் ஆசிரியர் சங்க தலைவர் தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
02-Aug-2024