வரி பாக்கி வைத்த 100 நிறுவனங்கள் பட்டியல் வெளியிட்டது மாநகராட்சி
பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள், பில்டர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. வரி செலுத்தாதோர் பட்டியலை, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு மாநகராட்சிக்கு, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும் வரி பாக்கி வைத்துள்ளன. வரி செலுத்தும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும், பதில் அளிக்கவில்லை. இத்தகைய நிறுவனங்களின் பட்டியல், ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள்
பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., பெங்களூரு மெட்ரோ நிறுவனம், போக்குவரத்து துறை, கே.ஹெச்.பி., பிரைம் கோ ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட், பொன்னி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், மந்த்ரி பிரைம்ஸ், லைப் ஸ்பேசஸ் பிரைவேட், கே.டி.ஜி., எஜுகேஷனல் டிரஸ்ட், பிரிமியர் சஞ்சீவினி மருத்துவமனை, ஜகத்குரு ரேணுகாச்சார்யா எஜுகேஷன் சொசைட்டி.கெஸ்வாட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், குட் ஷெப்பர்டு கான்வென்ட், எம்பசி பிராப்பர்டீஸ் லிமிடெட் உட்பட, 100 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்த நிறுவனங்களிடம் இருந்து, 900 கோடி ரூபாய் வரி வர வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை. மாநகராட்சியின் நோட்டீசையும் மதிக்கவில்லை.சொத்துதாரர்களின் வசதிக்காக ஒரே முறை, சொத்து வரியை செலுத்தினால், வட்டி மற்றும் அபராதத்தை ரத்து செய்யும், ஓ.டி.எஸ்., எனும், 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த சலுகையை பயன்படுத்துவதிலும், மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓ.டி.எஸ்., சலுகை
ஏப்ரல் இறுதி வரை 3,95,250 சொத்துகளில் இருந்து, 733.71 கோடி ரூபாய் வரி பாக்கி வசூலாகி இருக்க வேண்டும். ஆனால் ஜூலை 29 வரை, 1,07,344 சொத்துதாரர்கள் ஓ.டி.எஸ்., சலுகையை பயன்படுத்தி, வரி செலுத்தினர்.தானாக சொத்து குறித்து, தகவல் தெரிவித்து வரி செலுத்தும் திட்டத்தின் கீழ், குறைவான சொத்து அறிவித்து, வரி ஏய்ப்பு செய்த 16,904 சொத்துகளை கண்டுபிடித்து, வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளில் இருந்து, 282.59 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மண்டல வாரியாக மிக அதிகமான சொத்து வரி பாக்கி வைத்துள்ள, 100 சொத்துதாரர்களின் பட்டியல் வெளியிட்டோம். இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, செப்டம்பர் 30க்குள் வரி செலுத்தும்படி வேண்டுகோள் விடுப்போம். ஒருவேளை செலுத்தாவிட்டால், சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுப்போம்.- முனீஷ் மவுத்கில்,சிறப்பு கமிஷனர்,வருவாய் பிரிவு