உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரன்யா ராவ் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

ரன்யா ராவ் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

பெங்களூரு : துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்திய நடிகை ரன்யா ராவ், ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.நீதிபதி விஸ்வநாத் கவுடர் விசாரிக்கிறார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது. ரன்யா ராவ் தரப்பில் மூத்த வக்கீல் கிரண் ஜவளி முன்வைத்த வாதம்:ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட விஷயத்தில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுங்க சட்டத்தின் பிரிவு 102ஐ பின்பற்றவில்லை. இரவு முழுவதும் துாங்கவிடாமல் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கூறும் வருவாய் புலனாய்வு பிரிவு, மற்ற இருவரை பற்றிய தகவலை ஏன் வழங்கவில்லை? ஜாமின் கிடைத்த பின், எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகுவதாக என் மனுதாரர் கூறுகிறார். பெண் என்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.வருவாய் புலனாய்வு பிரிவின் வக்கீல் மது ராவ் முன்வைத்த வாதம்:மனுதாரர், சுங்க சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவு 102ஐ பின்பற்றாவிட்டாலும், குற்றச்சாட்டு நபர்களை தடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்று சட்டம் கூறுகிறது.தங்க கடத்தலில் பெரிய வலை அமைப்பு உள்ளது. அதை உடைக்க வேண்டும். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. மனுதாரருக்கு ஜாமின் கிடைத்தால் வெளிநாடு தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது.அவர் செய்த குற்றத்தின் தன்மையை பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் தேச பாதுகாப்பு தொடர்பான விஷயமும் உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாத் கவுடர், மனு மீது 14ம் தேதி தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார்.இதற்கிடையில் வழக்கு தொடர்பாக, ரன்யா ராவ் கணவர் ஜதினிடம், வருவாய் புலனாய்வு பிரிவினர் இரண்டு முறை விசாரித்தனர். கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

பண பரிமாற்றம்

மனுவை விசாரித்த நீதிமன்றம், 'ஜதின் மீது அவசர நடவடிக்கை எடுக்கக் கூடாது' என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதற்கிடையில், தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட தருண், ரன்யா ராவின் நண்பர் மட்டும் இல்லை, முன்னாள் காதலன் என்பதும் தெரிய வந்துள்ளது.வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து, புரோடோகால் பிரிவு அதிகாரிகள் மூன்று பேரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.வழக்கில் மடாதிபதி ஒருவரின் தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு துபாயில் ஒரு அலுவலகம் இருப்பதாகவும், அங்கு வைத்து பிட்காயின், பண பரிமாற்றம் நடந்தததாகவும் கூறப்படுகிறது. அந்த மடாதிபதிக்கு அரசியல் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் மடாதிபதியிடம் விசாரிக்கவும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை