தட்சிண கன்னடா : 'லோக்சபா கூட்டத்தில், ஹிந்து மதத்தை அவமதித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, நல்ல புத்தி வழங்க கோரி' விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், கோவிலில் வேண்டுதல் வைத்தனர்.லோக்சபா கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், '24 மணி நேரமும், ஹிந்து, ஹிந்து என்று கூறிக்கொள்வோர், வன்முறை, வெறுப்பு, பொய்யை பற்றி பேசுகின்றனர். உண்மையில் நீங்கள் ஹிந்து அல்ல' என்று பா.ஜ.,வினரை பார்த்து கூறினார். இவரின் பேச்சுக்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பண்ட்வாலில் உள்ள பொளலி ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று வந்தனர்.கோவில் அர்ச்சகர் பத்மநாப பட்டிடம், 'ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறி, கடவுளை அவமதித்தது மட்டுமின்றி, தேசத்தையும் ராகுல் அவமதித்துள்ளார். அவருக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்; அவரை தண்டிக்கவும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றனர்.இதையடுத்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வழங்கிய கடிதத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து, அர்ச்சகர் பிரார்த்தனை செய்து வழங்கினார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நல்ல புத்தி வழங்கக் கோரி, பொளலி ராஜராஜேஸ்வரி கோவிலில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அர்ச்சகர் மூலம் வேண்டினர். இடம்: மங்களூரு, தட்சிண கன்னடா.