சிவகுமாரை சஸ்பெண்ட் செய்வீர்களா? ஜெகதீஷ் ஷெட்டர் சவால்
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:துணை முதல்வர் சிவகுமார், கும்பமேளாவுக்கு சென்றது, கோவையில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்து, காங்கிரசிலேயே சர்ச்சை நடக்கிறது.இவர் கும்பமேளாவுக்கு, கோவைக்கு சென்றது இயல்பான விஷயம். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இது காங்கிரசாருக்கு தெரியவில்லை.சிவகுமார் காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டிருந்தால், அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யட்டும். அக்கட்சியினர் ஹிந்துக்களை எதிர்க்கின்றனர். இது காங்கிரசுக்கு நல்லது அல்ல. ஹிந்துக்கள் இல்லாமல், இவர்கள் அரசியல் செய்கின்றனர் என்றால், அது அவர்களின் தலையெழுத்து.ஹிந்துக்களை அவமதிப்பதும், தரக்குறைவாக பேசுவதும் காங்கிரசின் அழிவுக்கு காரணமாகிறது. கும்பமேளா குறித்து, மல்லிகார்ஜுன கார்கேவும், பிரியங்க் கார்கேவும் அவமதிப்பாக பேசுகின்றனர். காங்கிரசின் பல தலைவர்கள், கும்பமேளாவுக்கு சென்றுள்ளனர். அரசியலுக்கும், மதங்களுக்கும் முடிச்சு போடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.