உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசுத்த குடிநீர் குடித்து 2 கிராமத்தினர் பாதிப்பு

அசுத்த குடிநீர் குடித்து 2 கிராமத்தினர் பாதிப்பு

உடுப்பி: அசுத்த குடிநீர் குடித்ததில், இரண்டு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.உடுப்பி, பைந்துாரின் உப்புன்டா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கர்க்கி கள்ளி, மடிகல் கிராமங்களின் மக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீர் அசுத்தமாக இருந்தது.இந்த நீரை குடித்ததால், இரண்டு கிராமங்களின் 1,000க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட கிராமத்தினர், நேற்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். 'குடிநீர் வினியோகிக்கும் தண்ணீர் தொட்டியை, சுத்தமாக பராமரிக்கவில்லை; இதுவே அசம்பாவிதத்துக்கு காரணம்' என, கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.உடுப்பி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கடத் அளித்த பேட்டி:இரண்டு கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், தண்ணீர் மூலமாக நோய் பரப்பும் அம்சம் காணப்படுகிறது. நாங்கள் செப்டம்பர் 30ம் தேதியன்று, ஒரே தொட்டியில் இருந்து தண்ணீர் பயன்படுத்தும் கிராமங்கள், அதன் அருகில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்ய, குழுவை அனுப்பினோம்.குழுவினரும் தண்ணீர் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். இதில் பாக்டீரியா இருப்பது தெரிந்தது. சேறு கலந்த தண்ணீர் வந்ததாக, கிராமத்தினர் கூறுகின்றனர். தண்ணீர் அசுத்தமடைந்தது எப்படி என்பது குறித்து, நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.வினியோகிக்கப்படும் தண்ணீரை அப்படியே பயன்படுத்த கூடாது. நன்றாக வடிகட்டியோ அல்லது கொதிக்க வைத்தோ பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்து குடித்தவர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படியே பயன்படுத்தியவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ